அம்பத்தூரில் 13 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை : தமிழகத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்…!!
Author: Babu Lakshmanan26 March 2022, 10:14 am
சென்னை – அம்பத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு அத்துமீறி 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
அம்பத்தூர் அருகே செங்குன்றம் மொண்டியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநருக்கு 13 வயதில் மகள் உள்ளார். தாய் பிரிந்து வாழ்ந்து வருவதால், இவரும், 15 வயது சகோதரரும் பாட்டியுடன் வசித்து வருகின்றனர். 7ம் வகுப்பு படித்து வரும் சிறுமி, வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் 5 பேர் கொண்ட போதை கும்பல் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- குடிப்பழக்கம் கொண்ட எனது தந்தை அடிக்கடி வீட்டுக்கு வர மாட்டார். தாயும் வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதனால் எனது அண்ணன்தான் என்னை படிக்க வைத்து வருகிறார்.
இந்த நிலையில் போதையில் வீட்டுக்கு வந்த 5 பேர் எனது அண்ணனை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதனால் அவன் திருத்தணியில் உள்ள பெரியப்பா வீட்டுக்கு சென்று விட்டான். இதனால் நான் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட 5 பேரும் கடந்த மாதம் 8-ந்தேதி நள்ளிரவு 2 மணிக்கு வீட்டுக்கு வந்தனர். தூங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி 5 பேரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் என்னிடம் மிகவும் தகாத முறையில் நடந்து கொண்டனர்.
இதன் பிறகு கடந்த 2 மாதங்களாக போதை கும்பலைச் சேர்ந்த 5 பேரும் அடிக்கடி வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்து தாங்க முடியாத அளவுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். 5 பேரும் என்னை கட்டிலில் தள்ளி விட்டு பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தனர். அவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நாங்கள் சொல்கிறபடி நடந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று அந்த கும்பல் மிரட்டி வருகிறது.எனவே என்னைபாலியல் ரீதியாக துன்புறுத்திக் கொண்டிருக்கும் 5 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் வெளியே தெரிந்த நிலையில், இந்த பாலியல் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணும், வேலூரில் பெண் மருத்துவரும் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அரங்கேறி ஒருவாரம் கூட ஆகாத நிலையில், தமிழகத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருப்பது பெண்களிடையே ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.