வங்கியில் 32 கிலோ நகைகள் கொள்ளை… வங்கி ஊழியர் போட்ட பலநாள் திட்டம் ; வசமாக சிக்கிய ஜிம் நண்பர்கள்!!
Author: Babu Lakshmanan15 August 2022, 12:57 pm
சென்னை : சென்னையில் பிரபல வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அதே வங்கி ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பெடரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் காவலாளிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வங்கியின் சார்பில் பொது மக்களிடம் இருந்து அடமானமாக பெற்றிருந்த 32 கிலோ நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனால் வங்கி கிளை முன்பு வாடிக்கையாளர்கள் திரண்டனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் இதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. முருகன், தனது ‘ஜிம்’ நண்பர்கள் சிலருடன் சேர்ந்து திட்டம் போட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது கண்டு பிடிக்கப்பட்டது.
பெடரல் வங்கியில் கொள்ளை அடிப்பதற்கு முருகன் மூளையாக செயல்பட்டதும், கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து முருகனின் செல்போன் எண்ணை வைத்து துப்புதுலங்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர்.
அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் முருகனையும் அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தீவிரமான பணிகளில் ஈடுபட்டனர். அதில், முருகனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 20 கிலோ நகைகள் மீட்கப்பட்டன.
பெடரல் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளில் இவர்கள் 3 பேரும் 20 கிலோ நகைகளை பங்கு போட்டு பிரித்து எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முருகனுடன் சேர்ந்து பல நாட்கள் திட்டம் போட்டதாகவும், பின்னரே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கொள்ளை கும்பல் தலைவன் முருகன் தலைமறைவான நிலையில், அவனை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.