பஸ் ஏன் இவ்வளவு லேட்டா கிளம்புதுனு கேட்டது ஒரு குத்தமா..? கேள்வி கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய டிரைவர் – கண்டக்டரால் பரபரப்பு
Author: Babu Lakshmanan2 February 2022, 12:30 pm
சென்னை : பேருந்து கிளம்புவதற்கு தாமதமானது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண்ணை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகம்மா என்பவர் தனது கணவர் செந்திலுடன் பாரிமுனை செல்ல பெரும்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இன்று அதிகாலை 5 மணியளவில் சென்றார். அங்கு நின்றிருந்த அரசுப் பேருந்தில் அவர்கள் ஏறிய நிலையில், 5.30 மணி ஆகியும் பேருந்து கிளம்பாமல் இருந்துள்ளது. இது தொடர்பாக ஓட்டுநரிடம் முருகம்மா கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், ‘இஷ்டம் இருந்தால் காத்திருங்கள், இல்லையேல் இறங்கிச் செல்லுங்கள்,” என ஒருமையில் பேசியுள்ளார். இதன் காரணமாக, ஓட்டுநருக்கும் முருகம்மா தம்பதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாய் வார்த்தை முற்றிய நிலையில் முருகம்மா மற்றும் அவரது கணவர் செந்தில் மீது அரசு பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர் சரமாரியாக தாக்கினர். இதில், முருகம்மா மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக்கண்ட பொது மக்கள் பேருந்து முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததினால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே, பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் பயணிகளை அலைகழிப்பதாகவும், பயணிகளிடையே அதிகார தோரணையில் பேசுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர்.