பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு… மேலும் 3 டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள்… சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!!

Author: Babu Lakshmanan
9 April 2022, 11:24 am

சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் மேயர் பிரியா முன்னிலை இன்று தொடங்கியது. 6 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் பிரதிநிதிகளின் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை மாநகராட்சி மேயர் பிரியா வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பின் முக்கிய அம்சங்களாவது :- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழி பேசும் பயிற்சி அளிக்கப்படும். 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படும். சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். பாலின பாகுபாடு இல்லாமல் நேர்மறை சிந்தனையை உருவாக்க சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ‘பாலின சமத்துவ குழுக்கள்’ அமைக்கப்படும்.

சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகராட்சியில் இலவச நாப்கின்கள் வழங்குதல், கழிவறை வசதிகளை மேம்படுத்த ரூ.23.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 6 டயாலிசிஸ் மையங்கள் போக, மேலும் 3 டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் படிப்படியாக டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

2022-23ம் நிதியாண்டில் மேயர் சிறப்பு மேம்பாடு திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் மேம்பாட்டு நிதியாக ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் சென்னை மாநகராட்சி மருத்தவமனையில் அறுவை சிகிச்சை மூலமாக 11,539 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. சென்னை மாநகராட்சியில் e-office அறிமுகப்படுத்தப்படும். இதன் வாயிலாக வரும் காலங்களில் பொதுமக்களுக்கான சேவைகள் காலதாமமின்றி விரைவாக செய்து முடிக்க இயலும்.

2011 கணக்கின்படி, சென்னையில் 66.72 லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 88 லட்சமாக அதிகரித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக கடற்கரையில் நிரந்தர பாதை அமைக்கும் பணிக்கு ரூ.1.14 கோடி ஒதுக்கீடு; இந்த பணிகள் துவங்கப்பட்டு 2 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டும்.

டிஜி லாக்கரிலிருந்து வர்த்தகர்கள் வர்த்தக உரிமைகளை பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும். சொத்து வரியை பொதுமக்கள் எளிதாக செலுத்த QR குறியீடு வசதி அறிமுகம் செய்யப்படும்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?