பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து ஆபாச பேச்சு.. பகிரங்க மன்னிப்பு கேட்க திமுக பிரமுகர் சைதை சாதிக்கிற்கு நீதிமன்றம் உத்தரவு

Author: Babu Lakshmanan
26 November 2022, 10:11 am

சென்னை ; பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பிரமுகர் பகிரங்க மன்னிப்பு கேட்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

அண்மையில் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வுக்கு நன்றி பாராட்டும் பொதுக்குழு விளக்கக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை ஆர்கே நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்
அமைச்சர் மனோ தங்கராஜ் மேடையில் அமர்ந்திருந்த போது, திமுக நிர்வாகியான சைதை சாதிக் என்பவர் பாஜக குறித்தும், பாஜக மகளிர் நிர்வாகிகளான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி பற்றியும் தகாத வார்த்தைகளில் விமர்சித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், திமுகவினரே, அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகளை ஆபாசமாக பேசியதை, மேடையில் இருந்த அமைச்சர் கண்டிக்காமல், அதற்கு ஆதரவு அளிப்பது போல் சிரிப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாக்கியது. இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கமும் கொடுத்திருந்தார். இருப்பினும், இந்த சர்ச்சை ஓய்ந்த பாடில்லை.

இதுபோன்று அரசியல் நாகரீகம் இல்லாமல் நடக்கும் கட்சி நிர்வாகிகள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், முன்ஜாமீன் கோரி சைதை சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பெண்கள் குறித்து மனுதாரர் அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருப்பதால், இனிமேல் இதுபோல் பேசமாட்டேன் என, அவர் பாஜக பெண் நிர்வாகிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையை வருகிற 29-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து, அதுவரை சைதை சாதிக்கை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 522

    0

    0