அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் விதிப்பு… நீதிபதி பரபரப்பு உத்தரவு… மருத்துவமனையில் தீவிர பாதுகாப்பு..!!
Author: Babu Lakshmanan14 June 2023, 4:24 pm
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜுன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது தலைமை செயலகத்தின் அறையில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை தொடர்ந்து, அவரது வீட்டின் முன்பாக துணை ராணுவப் படையினர், அதிவிரைவு படையினர் என அடுத்தடுத்து குவிக்கப்பட்டனர்.
சுமார் 17 மணிநேரம் நடந்த இந்த சோதனைக்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். மேலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
நெஞ்சில் கைவைத்தபடி அவர் காரில் மருத்துவமனைக்கு அப்போதே அழைத்துச்செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இரத்த நாளங்களில் 3 அடைப்பு இருப்பதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவர்களும், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினும் நேரில் வந்து பார்த்து, உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் முறையிட்டனர். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதால், மருத்துவமனைக்கே வந்து நீதிமன்ற காவலை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், நீதிபதி அல்லியை நேரில் அனுப்பி விசாரிக்க அறிவுறுத்தியது. அதன்பேரில், மருத்துவமனையில் 6,084 எண் கொண்ட அமைச்சரின் அறைக்கே சென்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, செந்தில் பாலாஜியை உடனடியாக ஜாமீனில் விடுவிக்கக்கோரி நீதிபதியிடம் வழக்கறிஞர் இளங்கோ மனு தாக்கல் செய்தனார். இருதரப்பினரும் வாதம் செய்த நிலையில், மேற்கொண்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நீதிபதி அல்லி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜுன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பதாக உத்தரவிட்டதுடன், ஜாமீன் தொடர்பாக இருதரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் தொடருவார்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி ஆணையிட்டார். இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.