போலீசாரை கெட்ட வார்த்தைகளில் திட்டிய திமுக கவுன்சிலரின் கணவர்… அடுத்தடுத்து அத்துமீறும் ஆளும்கட்சி கவுன்சிலர்களின் உறவினர்கள்..!! (வீடியோ)
Author: Babu Lakshmanan31 March 2022, 3:03 pm
சென்னை ராயபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை மாநகராட்சியின் 51வது வார்டு மாமன்ற உறுப்பினர் நிரஞ்சனா என்பவரின் கணவர் ஜெகதீஷன். இவர் சென்னை வடக்கு மாவட்டத்தின் உதயநிதி ரசிகர் மன்ற செயலாளராகவும் இருந்து வருகிறார். அதோடு, வழக்கறிஞாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவர் நேற்றிரவு ராயபுரத்தில் உள்ள ஜேபி கோவில் தெருவில், தனது ஆதரவாளர்களுடன் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்துள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால், அப்போது, அந்தப் பகுதிக்கு ரோந்து வந்த போலீசார், இந்த நேரத்தில் எதற்காக கும்பலாக இருக்கிறீர்கள்…? அனைவரும் களைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனால், கோபமடைந்த திமுக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் தகாத வார்த்தைகளில் காவலர்களை திட்டி தீர்த்தார். அவருடன் இருந்தவர்களும் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினர்.
ஆளும் கட்சியியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் என்பதால், செய்வதறியாது நின்ற போலீசாரால், அவர்கள் பேசுவதை வீடியோ மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே, பாதிக்கப்பட்ட காவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, சென்னை பல்லாவரம் அருகே மாமூல் தராத கடைகளை திமுக கவுன்சிலரின் கொழுந்தன் அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, புளியந்தோப்பு பகுதியில் திமுக கவுன்சிலரின் கணவர், வீடுகட்டிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் கமிஷன் கேட்ட வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது.
இப்படியிருக்கையில், திமுக கவுன்சிலர்களின் உறவினர்கள் தொடர்ந்து, இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டு வருவதை முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.