மனைவிக்கு தேர்தலில் சீட் வாங்க முயன்ற திமுக நிர்வாகி கொடூரமாக வெட்டிக்கொலை : சென்னையில் அதிர்ச்சி

Author: Babu Lakshmanan
2 February 2022, 11:29 am

சென்னை : சென்னை மாநகராட்சி தேர்தலில் தனது மனைவியை போட்டியிடச் செய்ய முயன்ற திமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மடிப்பாக்கம் 188வது திமுக வட்டச் செயலாளராக இருந்தவர் செல்வம் (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 188வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தனது மனைவியை திமுக சார்பில் போட்டியிட செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இது தொடர்பாக ராஜாஜி சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் செல்வம் நேற்றிரவு ஆலோசனை நடத்தி வந்தார்.

அப்போது, 3 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல், செல்வத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்ததுடன், சம்பவ நிகழ்ந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

திமுகவில் போட்டியிடுவதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக கட்சியின் நிர்வாகி கொலை செய்யப்பட்டிருப்பது சக கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, செல்வத்தின் மறைவுக்கு திமுக எம்பி தமிழச்சி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, சோழிங்கநல்லூர் – மடிப்பாக்கம், 188-வது வட்டச் செயலாளர் திரு.செல்வம் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
நாடாளுமன்ற தேர்தலில், நான் வேட்பாளராக போட்டியிட்ட போது, கழகத்தின் வெற்றிக்காக அவர்‌ ஆற்றிய அளப்பரிய பணி என் கண்முன் வந்து செல்கின்றது, கழக நிகழ்ச்சிகளை அப்பகுதியில் முன்னின்று, சிறப்பாக நடத்தக்கூடிய உழைப்பாளி. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 2374

    0

    0