நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்கம் கொள்ளை.. சென்னையை உலுக்கிய திருட்டு சம்பவம்.. 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை!!

Author: Babu Lakshmanan
10 February 2023, 2:27 pm

சென்னை : சென்னையில் பிரபல நகைக்கடையில் 9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை – பெரம்பூர் பகுதியில் உள்ள பேப்பர் மில் சாலையில் ஸ்ரீதர் என்பவர் தனியார் நகைக்கடையை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல நகைக்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் மெஷினால் வெட்டி உள்ளே சென்ற மர்மநபர்கள், நகைக்கடையில் இருந்த சுமார் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும், நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நகைக்கடை உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போலீசார், நகைக்கடை கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகைக்கடையில் கடந்த 3 மாதங்களாக காவலர்கள் இல்லை என்பதை நோட்டமிட்ட பிறகே இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியிருப்பதாகக் கூறப்படுகிறது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த நகைக்கடை கொள்ளை குறித்து விசாரிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!