அணுகுமுறையே தப்பு… குடிசை வீட்டுக்காரர்கள் புறக்கணிப்பு… மாடி வீட்டில் இருப்பவர்களுக்கு ரூ.6000 நிவாரணமா..? ராமதாஸ் கொந்தளிப்பு!!
Author: Babu Lakshmanan18 December 2023, 1:00 pm
மழை வெள்ள நிவாரணம் ரூ.6,000 உதவித் தொகையை பெற அப்பாவி மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கும் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் துயரங்களைப் போக்குவதற்கு பதிலாக வேதனையையும், மன உளைச்சலையும் அதிகரித்திருக்கிறது. நிவாரண உதவி வழங்குவதில் நிகழும் குளறுபடிகள் தான் அனைத்துக்கும் காரணம் ஆகும். இந்த தவறான அணுகுமுறை கண்டிக்கத்தக்கது ஆகும்.
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்குக் கூட நிவாரண உதவி மறுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அனைத்து வசதிகளுடன் வாழும் பணக்காரர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் நிதி உதவி பெறுவதற்கான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. நிவாரண உதவி கண்டிப்பாக தேவைப்படும் நிலையில் உள்ள ஏழை மக்களை புறக்கணிப்பது அவர்களின் துயரங்களை மேலும் அதிகரிக்கும்.
தமிழக அரசின் நிவாரண உதவி பெறுவதற்கான ஒரே தகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தான். அதன்படி. பார்த்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 40 லட்சத்திற்கும் கூடுதலான குடும்பங்கள் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மழை – வெள்ளத்தை பார்வையிட வந்த மத்தியக் குழுவிடம் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளில் இதை தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. அதன்படி, 40 லட்சம் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், 24 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
நிவாரண உதவி மறுக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான முறை நடைமுறைக்கு சிறிதும் ஒத்துவராததாக உள்ளது. அதற்காக கோரப்படும் ஆவணங்களையும், சான்றுகளையும் சேகரித்து வழங்குவது பாமர மக்களால் இயலாத ஒன்றாகும். மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீண்டும், மீண்டும் வேதனைக்கு உள்ளாக்கக் கூடாது. மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும், மற்றவர்களுக்கும் எந்த நிபந்தனையும் இல்லாமல் ரூ.6000 இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.
0
0