சென்னையில் வெள்ளம்… மக்களுக்கு காத்திருக்கும் அடுத்த பேராபத்து ; தமிழக அரசை எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்!!
Author: Babu Lakshmanan6 December 2023, 11:50 am
சென்னையில் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மிக்ஜம் புயல் காரணமாக பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் வடிவதற்காக சாத்தியக்கூறுகளே தென்படவில்லை. மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தோற்று நோய்கள் உருவாகி பரவக்கூடிய ஆபத்து உள்ளது. ஏற்கனவே மழை – வெள்ளத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், தொற்று நோயும் பரவினால் அதை மக்களால் தாங்க முடியாது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே இன்ஃபுளூயன்சா காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகின்றன. அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பிக் கிடக்கின்றன. இந்த நோய்களும் மழைக்கால தொற்று நோய்களும் சேர்ந்து கொண்டால், நோய்ப்பரவலை கட்டுப்படுத்துவது கடினமாகி விடும். இந்த ஆபத்து வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதை தமிழக அரசு உணர வேண்டும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் தேங்கிக் கிடந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். சென்னையின் அனைத்துத் தெருக்களிலும் மருத்துவ முகாம்களை நடத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மாநகரில் பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என வலியுறுத்தி அவர் விடுத்துள்ள மற்றொரு பதிவில், மிக்ஜம் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படைத் தேவையான பால் கிடைக்கவில்லை. ஒரு சில இடங்களில் பால் கிடைத்தாலும் ரூ.25 மதிப்புள்ள பால் பாக்கெட் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழையால் உணவு கிடைக்காத நிலையில் பால் மட்டு்மே பசியைப் போக்கும் தீர்வாக உள்ளது. குறிப்பாக குழந்தைகள் உள்ள குடும்பங்களில் பால் தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. ஆனால், பால் பாக்கெட்டுகளைக் கூட தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்படாதது வருத்தமளிக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு இன்று இரண்டாவது நாளாக பால் இலவசமாக வழங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்திருந்தாலும் கூட, பெரும்பான்மையான பகுதிகளில் பால் வழங்கப்படவில்லை. சில பகுதிகளில் மட்டும் அரசு சார்பில் வழங்கப்பட்ட பால் பாக்கெட்டுகளை தாங்கள் வழங்குவதாகக் கூறி ஒரு சில வீடுகளுக்கு மட்டும் திமுகவினர் வழங்கினார்கள். கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் 90% வீடுகளுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட இலவச பால் வழங்கப்படவில்லை.
ஆவின் பால் விற்பனை நிலையங்களில் பால் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை தான் காணப்படுகிறது. மக்களின் விரக்தியும், ஏமாற்றமும் கோபமாக மாறுவதற்கு முன் பால் தட்டுப்பாடு போக்கப்பட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.