தவறான நிர்வாகம், பேராசையே சென்னை வெள்ள பாதிப்புக்கு காரணம் ; நடிகர் விஷாலை தொடர்ந்து மற்றொரு திரை பிரபலம் வாய்ஸ்!!

Author: Babu Lakshmanan
6 December 2023, 12:08 pm

சென்னை மக்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், தவறான நிர்வாகம், பேராசையே இதற்கு காரணம் என்று திரை பிரபலம் ஒருவர் குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த 2ம் தேதி முதல் 3 தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் குளம்போல காட்சியளிக்கின்றன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொருட்களை இழந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தாலும், குறிப்பாக, வேளச்சேரி, தாம்பரம் மற்றும் ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் இன்னமும் தத்தளித்து வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி, சென்னையில் விஐபி ஏரியாக்களில் வசிக்கும் திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகளும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இதனால், பால், உணவு மற்றும் மின்சாரம் என பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.

அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்த மழை வெள்ள பாதிப்பு குறித்து திமுக அரசை அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரூ.4000 கோடி செலவில் வடிகால் பணிகளை செய்ததாக சொல்லிய திமுக, மக்களை ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசையே சென்னையில் வெள்ளம் தேங்குவதற்கான காரணம் என்று பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழைநீர் மற்றும் கழிவு நீரை ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது. அதனாலேயே ஒவ்வொரு முறையும் ஆறுபோல் எங்கள் குடியிருப்புகளை மழைநீர் தாக்குகிறது.

இந்த நேரத்தில் யாராவது நோய்வாய்ப்படுவது அல்லது மருத்துவ அவசரத்தில் இருப்பது போன்றவை ஏற்பட்டு மரணத்தை கொண்டு வருகிறது. மீட்பு பணிகளுக்காக என்னிடம் ஒரு படகும், சில பம்புகளும் நிரந்தரமாக உள்ளன. மக்களை தொடர்பு கொள்ளவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் என்னால் முடிந்தவரை அனைத்தையும் செய்து வருகிறேன்,” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடிகர் விஷால் தமிழக அரசுக்கு எதிராக பொங்கி எழுந்து வீடியோ வெளியிட்ட நிலையில், மற்றொரு திரைபிரபலம் வாய் திறந்திருப்பது ஆளும்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 353

    0

    1