5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்… விட்டு விட்டு அடிக்கும் கனமழை…. வெள்ளக்காடான சென்னை மாநகரம்…!!
Author: Babu Lakshmanan3 November 2023, 1:45 pm
தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
அந்த வகையில் சென்னையில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியில் பெய்யும் தொடர் கனமழையால், கிண்டியில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. சாலையில் பெருக்கெடுத்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் மக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் பிறப்பித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல்லில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கன மழை பெய்யும் என்றும், 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.