முரசொலி பஞ்சமி நில விவகாரம்… திமுக தொடர்ந்த மனு தள்ளுபடி… விசாரணை நடத்த தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திற்கு உத்தரவு

Author: Babu Lakshmanan
10 January 2024, 12:44 pm

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரணையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கடந்த 2019ம் ஆண்டு பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன், தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆனால், இந்த விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது என அவர் கூறியிருந்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட நிலம் மாதவன் நாயர் என்பவரிடமிருந்து அஞ்சுகம் பதிப்பகத்திற்கு விற்கப்பட்டதாகவும், பஞ்சமி நிலம் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. 1914 ஆம் ஆண்டுக்கு முன்பான ஆவணங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், முரசொலி அலுவலக நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தலாம் என்று கூறி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து அவர்களின் விளக்கத்தையும் பெற்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!