பொன்முடியைத் தொடர்ந்து மேலும் இரு அமைச்சர்களுக்கு சிக்கல்… சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு ; அதிர்ச்சியில் அண்ணா அறிவாலயம்.!!
Author: Babu Lakshmanan23 August 2023, 8:43 am
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அமைந்த போது, 2006-2011 கால கட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2012ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், எனவே தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி, இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
இதேபோல, 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலெட்சுமி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
அமைச்சர் தங்கம் தென்னரசை போலவே, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனும், தனது மனைவியுடன் சேர்ந்து, இது அரசியல் பழிவாங்கும் செயல் என்றும், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று விருதுநகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதியும் இதனை ஏற்று, போதிய ஆதாரம் இல்லாததால், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியையும் வழக்கில் இருந்து விடுவித்தார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் எந்த மேல்முறையீடும் செய்யவில்லை. இதனால் அதிரடி காட்டிய உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இரு சீராய்வு மனுக்களையும் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த இரண்டு வழக்குகளும் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.
ஏற்கனவே, சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்தது நீதிபதி ஆனந்த் வெங்கேடஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை கீழமை நீதிமன்றத்தில் மோசமான முறையில் நடத்தப்பட்டுள்ளதாகவும், விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் தருவாயில், வழக்கு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதையும் அவர் விமர்சித்திருந்தார்.
தற்போது ஆளும் திமுக அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 3 முக்கிய அமைச்சர்களின் சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டிருப்பது திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.