இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி… நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு ; மீண்டும் வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைப்பு
Author: Babu Lakshmanan26 June 2023, 2:19 pm
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட வழக்கின் விசாரணை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதையடுத்து, நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை ஆகிய துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்என் ரவி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு முன்மொழிந்ததை ஏற்கவில்லை.
ஆனால், ஆளுநரின் நிராகரிப்பையும் மீறி, தமிழக அரசு செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, தமிழக அரசு துறைகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், செந்தில் பாலாஜியை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்த இலாகாக்களின் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த ஆளுநர், அவரை நீக்க வேண்டும் என எங்கு சொல்லியிருக்கிறார்? என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க கோரி ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுதினாரா? எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், கடிதத்தை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது. அதோடு, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் பிற்பகலுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.