கைதாகி 230 நாட்கள் ஆகியும் அமைச்சராக தொடர்வது ஏன்? சட்டம் எல்லோருக்கும் சமம் தானே… உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி..!!

Author: Babu Lakshmanan
30 January 2024, 4:29 pm

செந்தில் பாலாஜி கைதாகி 230 நாட்கள் ஆகியும் அமைச்சராக தொடர்வது ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் 3 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால், ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தையும் நாடியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து 18வது முறையாக நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 31ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மீண்டும் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில்பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ளார் எனக் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது என்றும், ஜாமீன் மனுவை ஆராய்ந்ததில் கடந்த முறை மறுத்த சூழல்கள் மாறியதாக தெரியவில்லை எனக் கூறினார்.

மேலும், கடைநிலை ஊழியர் கைதானால் 48 மணி நேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்படும் நிலையில், கைதாகி 230 நாள் ஆகியும் செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், மேலும் சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தானே என கூறினார்.

இதையடுத்து, செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பது குறித்து நீதிமன்றமே கேள்வி எழுப்பியிருப்பது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

  • D Imman latest interview என் போனை கொடுக்குறேன்..செக் பண்ணி பாத்துக்கோங்க…டி.இமான் ஓபன் டாக்.!