அதெல்லாம் முடியாது… பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ்-க்கு பின்னடைவு… குஷியில் இபிஎஸ் தரப்பு…!!

Author: Babu Lakshmanan
4 July 2022, 2:17 pm

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்து வரும் நிலையில், கடந்த ஜுன் மாதம் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் வரை சென்று, பொதுக்குழுவில், ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட 23 தீர்மானங்களை தவிர, வேறு எந்தத் தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என்ற உத்தரவை பெற்றனர்.

இது இபிஎஸ் தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, அந்தப் பொதுக்குழுவில் தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாகவும், ஜுலை 11ம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை உள்பட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஜுலை 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், அடுத்த பொதுக்குழு குறித்த அவரது அறிவிப்பும் நீதிமன்ற அவமதிப்பு என பன்னீர்செல்வம் தரப்பினர் குற்றம் சாட்டினர்.

இதனிடையே, ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த சண்முகம் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைச்சாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் நியமிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும், தீர்மானம் நிறைவேற்றியவர்களை தண்டிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. மேலும், ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட வேண்டும், அவைத் தலைவர் கூட்ட முடியாது எனவும் கூறியது.

ஓபிஎஸ் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவிற்கு மட்டுமே பொருந்தும் என்றும், அவைத்தலைவர் இல்லாமல் பொதுக்குழுவை எப்படி கூட்ட முடியும்..? எனவே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்க முடியாது என்று கூறினர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பொதுக்குழு கூட்டுவதற்கான ஏற்பாடுகளை இபிஎஸ் தரப்பினர் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!