சென்னையில் இன்று நடக்கிறது தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு : 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு என தகவல்
Author: Babu Lakshmanan4 July 2022, 9:05 am
சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, முதலீடுகளை கவரும் விதமாக, தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு குழுவினர், அபுதாபி மற்றும் துபாய் சென்று சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வரையிலான முதலீடுகளை ஈர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில் 60 ஒப்பந்தகள் கையெழுத்தாக உள்ளதாகவும், 70 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடுகள் கிடைக்கும் என்றும் தொழில் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட இருப்பதாகவும், இதுதவிர 12 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.