இன்னும் 16 வருஷம்தான்.. சென்னை கடலில் மூழ்கப்போகுது : CSTEP தந்த ஷாக் ரிப்போர்ட்..!!!
Author: Sudha2 August 2024, 2:51 pm
இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர நகரங்களுக்கான கடல் மட்ட உயர்வு மற்றும் கடல்நீர் புகுவது பற்றிய வரைபட அறிக்கையை நேற்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையிலிருந்து 15 முக்கிய நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில் சென்னை மற்றும் மும்பை நகரங்களே முதன்மை நகரங்களாக பரிசீலிக்கப்பட்டுள்ளன.
ஆய்வு முடிவில் 2040 ஆம் ஆண்டுவாக்கில் கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக சென்னை மாநகரின் 7 சதவிகித நிலப்பரப்பு கடல் நீரில் மூழ்கிவிடும் என தெரியவந்துள்ளது.`
ஏற்கனவே அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 76 நகரங்கள் எந்த அளவிற்கு காற்று மாசு அடைந்துள்ளது ஆய்வு செய்தது. அதில் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2030 ஆம் ஆண்டில் சென்னையில் Particulate Matter (PM) 2.5 எனும் நுண் துகள் மாசின் வெளியேற்றம் 27% அதிகரிக்கும் என குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் 2040 ஆவது ஆண்டில் சென்னை பெருநகரப் பகுதியில் 7.29 சதவிகிதம் வரையில் நீரில் மூழ்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,
இந்த அறிக்கைப்படி, அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவுத்திடல், அசோகச் சக்கர நினைவுச் சின்னம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் துறைமுகம் முதலான பகுதிகளில் கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் மும்பையில்தான் அதிகபட்ச கடல் மட்ட உயர்வு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள தொழிற்பேட்டைப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொள்ள உள்ளது.
அதிகரித்து வரும் நகரமயமாக்கல், கடற்கரையில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் ஆகியவற்றால் தாழ்வான கடலோர பகுதிகள் கடல் மட்ட உயர்வால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.