தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு.. சேலத்தில் 3வது நாளாக போராடிய செவிலியர்களை கலைத்த போலீசார் ; சென்னையில் வெடித்த போராட்டம்

Author: Babu Lakshmanan
4 January 2023, 1:43 pm

கொரோனா கால தற்காலிக செவிலியர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படாது என்ற தமிழக அரசின் முடிவை எதிர்த்து சேலத்தை தொடர்ந்து சென்னையிலும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொரோனா சமயத்தில் மருத்துவ தேர்வு ஆணையத்தின் மூலம் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட தங்களுக்கு, தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சேலத்தில் செவிலியர்கள் 3 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே அமைதியான முறையில் நடைபெற்ற இந்தக் காத்திருப்பு போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், நேற்று மாலை போராட்டம் நடத்திய செவிலியர்களை கைது செய்த போலீசார், அவர்களை தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், இன்று அதிகாலை 3 மணியளவில் செவிலியர்கள் மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். போலீசாரின் வாகனத்தில் ஏற மறுத்த அவர்கள், சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவாறு நடந்தே சென்றனர்.

எத்தனை தடைகள் போட்டாலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை மாற்றுவழியில் போராட்டத்தை தொடர்வோம் என்று செவிலியர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!