சென்னையில் இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டி… பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
Author: Babu Lakshmanan28 July 2022, 10:26 am
சென்னை : சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில், 187 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவரையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையை கொண்டதாகும்.
6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இந்த போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அணியை இந்தியா களமிறக்குகிறது. ஜூன் 19-ந்தேதியன்று டெல்லியில் இந்திராகாந்தி தேசிய விளையாட்டரங்கில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைமையகத்தை நோக்கி செல்வதற்கு முன்பு இந்த ஜோதி இந்தியாவில் 40 நாட்களுக்கும் அதிகமாக சுமார் 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு 75 முக்கியமான இடங்கள் வழியாக பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்திருக்கிறது.