பரந்தூர் விமான நிலையம் விவகாரம்.. பின்வாங்குகிறதா தமிழக அரசு..? அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை.. வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..?

Author: Babu Lakshmanan
20 December 2022, 10:54 am

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்டு வரும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் ஏகனாபுரம் கிராமத்தை மையமாக வைத்து 13 கிராமங்களில் அமைய உள்ளது . இது தொடர்பாக சர்வதேச ஒப்பந்த பள்ளி கோரப்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் அறிவிப்பை தொடர்ந்து ஏகனாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் இரவு நேர அறவழி போராட்டம் 140 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு சர்வதேச ஒப்பந்த பள்ளி கோரப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் புதிய விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஏகனாபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடை பயணம் மேற்கொள்வதாக அறிவித்தனர்.

இதனை ஒட்டி விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஏகனாபுரம் பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கைகளில் கருப்பு கொடி ஏந்தி தங்களது நடை பயணத்தை தொடங்கினர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் தொடர்ந்ததையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது போராட்டக்காரர்களுடன் தலைமை செயலகத்தில் 3 அமைச்சர்களுடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாக வருவாய் கோட்டாட்சியர் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இதனிடையே, கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் தொழில் பூங்கா அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முயற்சித்த நிலையில் மக்களின் எதிர்ப்பைக் கண்டு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதேபோல் அதிகமான நீர் நிலைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களைக் கொண்ட இந்த ஏகனாபுரம், நெல்வாய், மேல் ஏறி, நாகப்பட்டு பகுதிகளை கையகப்படுத்தக் கூடாது என சம்பந்தப்பட்ட கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், பரந்தூர் விமான நிலை திட்டம் தொடர்பாக கிராம மக்களுடன் தமிழக அமைச்சர்கள் எ.வ வேலு, தாமோ அன்பரசன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

சென்னை தலைமைசெயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் பரந்தூர் விமானநிலையம் உள்ள பகுதிக்கு, மாற்றாக வேறொரு இடத்தில் விமான நிலையம் அமைக்க போராட்டக்குழுவினர் வலியுறுத்தவுள்ளனர். தமிழக அரசை பொறுத்தவரை பாதிக்கப்படும் மக்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது. எனவே இன்றைய பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் தொடருமா.? பரந்தூர் விமான நிலையம் அதை இடத்தில் அமைய உள்ளதா? அல்லது செங்கல்பட்டு பகுதிக்கு மாற்றம் செய்யப்படுமா என்பது தெரியவரும்.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 497

    0

    0