3வது நாளாக தொடரும் பெத்தேல் நகர் மக்களின் போராட்டம் : குடியிருப்புகளை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு தொடரும் எதிர்ப்பு

Author: Babu Lakshmanan
28 January 2022, 12:06 pm

குடியிருப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்தும், பட்டா வழங்க வலியுறுத்தியும் சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெத்தேல் நகரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நீர்நிலைகளை ஆக்கிரமித்து இந்த வீடுகள் கட்டப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுமாறு 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, பெத்தேல் நகரில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஆண்டு வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனை வாங்க மறுத்த அப்பகுதி மக்கள், பட்டா வழங்குமாறு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி, வருவாய்த்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெத்தேல் நகருக்கு சென்றனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இசிஆர் சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு, பகல் பாராமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாங்கள் இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். அதுவரை வீடுகளுக்கு செல்லாமல் சாலையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என பெத்தேல் நகர் மக்கள் தெரிவித்தனர்.

kamal - updatenews360

இதனிடையே, காலம் காலமாக பெத்தேல் நகரில் வசித்துவரும் மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு உரிய பட்டா வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் போராட்டத்திற்கு அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருவதால், பெத்தேல் நகர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 3104

    0

    0