‘மோசமான சாலைகளால் நல்ல ஊழியரை இழந்து விட்டோம்’ ; ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் லாரி மோதி பலி!!

Author: Babu Lakshmanan
4 January 2023, 12:04 pm

சென்னை : சென்னையில் சாலையில் இருந்த பள்ளத்தினால் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்ததில், லாரி ஏறி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஸோகோ என்னும் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தவர் 22 வயது இளம்பெண் ஷோபானா. இவர் நேற்று தனது சகோதரனை பள்ளியில் விடுவதற்காக சென்றுள்ளார்.

மதுரவாயலில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது, அங்கு சாலையில் இருந்த பள்ளத்தினால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வேகமாக வந்த மணல் லாரி ஏறியதில் அவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக அவரது சகோதரர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். அதேவேளையில், இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு சாலைகளில் இருந்த பள்ளம்தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், அந்த பள்ளம் மணல், ஜல்லிகள் கொட்டி மூடப்பட்டது.

இதனிடையே, ஷோபானாவின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்த ஸோகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, சென்னை மதுரவாயல் அருகே குண்டும், குழியுமான சாலைகளில் ஸ்கூட்டர் சறுக்கியதில் ஷோபனா உயிரிழந்தாகவும், மோசமான சாலைகளால் அவரது குடும்பத்தினரும், ஸோகோவும் ஷோபானாவை இழந்துவிட்டதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை என்பதால், மாநில அரசை குறை சொல்ல முடியாது என்ற கருத்துக்கள் எழுந்து வருகின்றன.

சாலை யார் போடுவது..? என்று ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லாமல், மத்திய, மாநில அரசுகள் பொறுப்போடு சாலைகளை தரமானதாகவும், முறையாக பராமரித்தால் மட்டுமே இதுபோன்ற உயிர் பலிகளை தவிர்க்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 557

    0

    0