விஸ்வரூபம் எடுத்த 8 வழிச்சாலை திட்டம்…? ஜகா வாங்கும் திமுக அரசு!

Author: Babu Lakshmanan
6 January 2023, 6:12 pm

8 வழிச்சாலை

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை தமிழக பொது பணித்துறை அமைச்சர் எவ வேலு டெல்லியில் சந்தித்து பேசிய பின்பு சென்னை- சேலம் இடையேயான 277 கிலோ மீட்டர் தூர 8 வழிச்சாலை திட்டம் மீண்டும் விவாதத்துக்குரிய விஷயமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இத் திட்டத்திற்கு விவசாய நிலங்களை முந்தைய அதிமுக அரசு கையப்படுத்தியபோது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இப்போது ஆளும் கட்சியான பிறகு திமுக அப்படியே ஜகா வாங்கி விட்டது என்ற குற்றச்சாட்டு அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளால் முன் வைக்கப்படுகிறது.

மாற்று வழி

அதற்கு முக்கிய காரணம் அமைச்சர் எவ வேலு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சென்னை- சேலம் 8 வழிச் சாலை பணிகளுக்கு திமுக எதிர்ப்பாக இருந்தது என்பது தவறான செய்தி. அப்போது விவசாயிகள் அதை எதிர்த்து போராடினார்கள். அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளை அழைத்துப் பேசுமாறும் அல்லது மாற்று வழியை யோசிக்குமாறும்தான் கூறினார். எங்களோடு கூட்டணியில் இருந்த கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம்.

EV Velu - Updatenews360

ஆனால் நாங்கள் சட்டப்பேரவையில் பேசும்போது அப்படிச் சொல்ல முடியாது. அந்தப் பணிகளை தொடங்க வேண்டும் என்றால் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி முதலமைச்சரின் ஆலோசனை பெற்றே முடிவு எடுக்கவேண்டும். இது கொள்கை அளவில் எடுக்கப்பட வேண்டிய முடிவு” என்று கூறி இருக்கிறார்.

அதிமுக எதிர்ப்பு

இந்த விவகாரத்தில் கடந்த சில மாதங்களாகவே திமுக அரசு ஊசலாட்ட நிலை கொண்டுள்ளதை உணர்ந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதை வன்மையாக கண்டிக்கவும் செய்தார்.

“அதிமுக ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வந்தபோது திமுகவினர் அதை கடுமையாக எதிர்த்தனர். இன்று திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு திருவண்ணாமலையில் போராட்டமே நடத்தினார். அவர்களது கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டம் நடத்தினார்கள். அத்துடன் போராட்டம் நடத்த விவசாயிகளை தூண்டியும் விட்டார்கள். ஆனால் தற்போது 8 வழிச்சாலை திட்டம் வேண்டும் என்று அதனை எதிர்த்தவர்களே கூறுகிறார்கள்.

EPS - Updatenews360

நாங்கள் கொண்டு வந்தால் தவறு என்றார்கள், அவர்கள் கொண்டு வந்தால் சரி என்கிறார்கள். உலகத்தரத்திற்கு இணையாக பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய அரசிடம் இருந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் போராடி பெறப்பட்டது. மாநிலத்தின் நலனுக்காக ஒரு திட்டம் கொண்டு வந்தால் வேண்டுமென்றே அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சிப்பது. இதுதான் திராவிட மாடல் திமுக ஆட்சி”
என்று காட்டமாக சாடியும் இருந்தார்.

திமுக ஆதரித்ததா?

உண்மையிலேயே 8 வழிச்சாலை திட்டத்தை திமுக ஆதரித்ததா? எதிர்த்ததா? என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுவது இதுதான்.

” 2018-ம் ஆண்டு மே மாதம் இத்திட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. எனவே பாதிக்கப்படும் விவசாயிகளின் கருத்தை கேட்டு இதை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக கூறியது.

அதேநேரம், நிலம் கையகப் படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் 2019 ஏப்ரல் மாதம் தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ததுடன் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, 8 வார காலத்தில் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கும்படியும் உத்தரவிட்டது.

இதன் பிறகு 8 வழிச் சாலை திட்டத்தில் தனது போக்கை திமுக அப்படியே மாற்றிக் கொண்டு விட்டது என்பதுதான் உண்மை. இந்தத் திட்டத்திற்கு எதிராக உடனே போர்க்கொடியும் உயர்த்தியது. மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தபோது திட்டத்தை நிறைவேற்ற கோர்ட் அனுமதி வழங்கியது.

இந்த தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி திமுக தலைவரும் அப்போதைய எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கொந்தளித்து
வெளியிட்ட அறிக்கையில், “சென்னை-சேலம் 8 வழி சாலையை தொடரலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை முன் வைக்கவில்லை. மத்திய பாஜக அரசு நிறைவேற்றிய தீர்வோம் என்று வாதிட்டது. இதுவே உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்தாக காரணமாக அமைந்து விட்டது. பாஜக -அதிமுக அரசுகளுக்கு மக்கள் மன்றம் பாடம் புகட்டும். மத்திய அரசின் திட்டம் என்று சொல்லி தப்பித்துக் கொள்ள நினைக்காமல் 8 வழிச் சாலை திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று இந்த திட்டம் கூடவே கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக கருத்து தெரிவித்தும் இருந்தார்.

அது மட்டுமில்லாமல் 2021-ம் ஆண்டு திமுக ஆட்சியை கைப்பற்றிய பின்பு ஜூன் மாதம் டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கோரிக்கை பட்டியல் ஒன்றையும் கொடுத்தார்.

கைவிடுங்க

அந்த கோரிக்கைகள் ஒன்றில் சுருக்கமாக சென்னை சேலம் 8 வழிச் சாலை என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் திமுக அரசு இத் திட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறதா? என்ற கேள்வி சர்ச்சையாக வெடித்தது.

அதன் கூட்டணி கட்சிகளும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தின. இதனால் பதறிப்போன திமுக அரசு உடனடியாக ஒரு செய்தி குறிப்பையும் வெளியிட்டது.

அதில் பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய மனுவின் சுருக்க உள்ளடக்க குறிப்பில் சென்னை -சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்தை கைவிடுமாறுதான் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தது.
இதனால் திருப்தியடைந்த கூட்டணி கட்சிகள் திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதில் மிகுந்த உறுதியாக இருக்கிறார் என்று கொண்டாடி மகிழவும் செய்தன.

ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கும், தமிழக மக்களுக்கும் சுத்தமாக மறந்து போயிருக்கலாம் என்று நினைத்தோ, என்னவோ திமுக அரசு தற்போது சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்ற துடிப்பது நன்றாகவே தெரிகிறது. அதைத்தான் அமைச்சர் எ வ வேலுவும் உறுதிப்படுத்துகிறார்.

அதிமுக ஆவேசம்

அதனால்தான் உங்களுக்கு வந்தா ரத்தம்? எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? என்று அதிமுக தலைவர்கள் ஆவேசமாக கேட்கும் நிலையும் ஏற்பட்டுவிட்டது.

அதேநேரம் இத்திட்டத்தை எதிர்த்து 2018 முதல் 2021 மார்ச் மாதம் வரை தீவிரமாக போராடிய திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட்,
இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவற்றுக்கும் சமூக போராளிகள் என்ற பெயரில் போராட்டக் களத்தில் குதித்த சில நடிகர்களுக்கும் திமுக அரசின் முடிவு தர்ம சங்கடமான நிலையையும், பெருத்த தலைகுனிவையும் ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

அதுவும் சென்னை -சேலம் 8 வழிச் சாலை பணியை திமுக எதிர்த்தது என்பது தவறான தகவல் என்று அமைச்சர் எ வ வேலு இப்போது கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலத்தான் உள்ளது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கிண்டலாக கூறுகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1205

    0

    1