திடீரென டிஐபி வளாகத்தில் நுழைந்த போலீசார்… தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது ; அதிகாலையில் சென்னையில் பரபரப்பு..!!!
Author: Babu Lakshmanan5 October 2023, 8:46 am
சென்னை டிபிஐ வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது டிபிஐ வளாகத்தில் அரசு பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுடன் இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் கலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல, பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் 10வது நாளாக நீடித்தது. முன்னதாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, போராட்டம் தொடர்ந்து வந்தது. இதனிடையே, சமவேலை சம ஊதியர் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய மூவர் கொண்ட குழு தமிழக அரசு சார்பில் நேற்று நியமனம் செய்தது. மேலும், போராட்டத்தை கைவிடுமாறும் ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று ஆசிரியர்கள் திட்டவட்டமாக கூறி, போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் டிபிஐ வளாகத்தில் நுழைந்தனர். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினர்.
குழந்தைகளுடன் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டு, அனைவரும் புதுப்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
அங்கு ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் தேவை என கோஷம் எழுப்பி வருகின்றனர்.