தமிழகத்தில் மீண்டும் ஒரு சாத்தான்குளம் சம்பவமா..? போலீஸ் தாக்கியதில் விசாரணை கைதி உயிரிழப்பு..? வெளியாகிய பகீர் உண்மை பின்னணி..!!
Author: Babu Lakshmanan21 April 2022, 6:15 pm
கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாக கூறி, அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு போலீசார் நடத்திய சித்ரவதைகளால் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரை திமுக எம்பி கனிமொழி, தற்போதைய எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆறுதல் கூறியதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வரும் நிலையில், சென்னையில் மேலும் ஒரு காவல்நிலைய மர்ம மரணம் அரங்கேறியிருப்பது தமிழகத்தை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிலும் இந்த சம்பவத்தை போலீசார் மூடி மறைக்க முயற்சிப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு தொகை கொடுத்து திசைதிருப்ப முயற்சிகள் நடப்பதாகவும் வெளியாகியுள்ள தகவல் அனைவரையும் திகைப்படையச் செய்துள்ளது.
சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸார் நேற்று முன்தினம் இரவு புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த இளைஞர்கள் 2 பேரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அந்த சமயம், போலீசார் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்துள்ளனர். மேலும், அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு தப்பித்து ஓடவும் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்களிடம் கத்தியும், கஞ்சாப் பொட்டலமும் இருந்ததாம். இதையடுத்து, பிடிபட்ட திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் (28), பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்(28) ஆகியோரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், இவர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று காலை விக்னேஷுக்கு வலிப்பு ஏற்பட்டு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, அவரை போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எதிர்பார்க்காதவிதமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை என்ற பெயரில் போலீஸார் விக்னேஷை அடித்துக் கொன்றுவிட்டதாக விக்னேஷின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே, விக்னேஷ் மர்மமரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவல்நிலைய கஸ்டடிக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்தில் உண்மையை போலீசார் மூடிமறைப்பதாகவும், அரசியல் கட்சிகளை திசைதிருப்பவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளதாக சமூக ஆர்வலரும், மூத்த பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர் பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- போலீஸ் கஸ்டடியில் இருந்த விக்னேஷ் என்ற இளைஞர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழக்கவில்லை. போலீசார் அறிக்கையில் கூறிய அனைத்து தவறானது தகவல். விக்னேஷ் என்பவர் பீச்சில் குதிரை ஓட்டும் பணியைச் செய்பவர். சுரேஷ் பெயின்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருவரும் ஒருவேளை போதையில் இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் போலீசாரை கத்தியால் தாக்க முயன்றதாகக் கூறுவது பொய்யான தகவல். போதையில் அவர்கள் போலீசாரை எதிர்த்து பேசியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த போலீசார் விக்னேஷின் தலையில் ஹெல்மெட்டை வைத்து அடித்துள்ளனர். இதன் காரணமாக, அவரின் தலையின் உள் காயம் ஏற்பட்டதோ, என்னமோ, அவர் நிலைகுலைந்து போயுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ந்து போன போலீசார் உடனே விக்னேஷை அழைத்துக் கொண்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால், அனுபவமில்லாத மருத்துவர்கள் அவர் நலமுடன் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, விக்னேஷை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
நள்ளிரவு போலீசார் நடத்திய தாக்குதலில் இருந்து மீளாத விக்னேஷ் காவல்நிலையத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனால், சுரேஷ் என்பவர் சாட்சியமாக இருப்பதால், உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக நாடகமாடி விட்டு, சுரேஷை காவலில் வைத்துள்ளனர்.
முழுக்க முழுக்க போலீசார் கொடுத்த அறிக்கையையே அனைத்து பத்திரிக்கைகளும் செய்தியாக வெளியிட்டுள்ளன. யாரும் உண்மையை வெளியிடவில்லை.
வழக்கமாக, பிரேத பரிசோதனைக்காக ஏட்டு மட்டுமே சென்று அனைத்து பணிகளையும் கவனிக்கும் நிலையில், விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யவிருக்கும் மருத்துவமனையில் 5 இன்ஸ்பெக்டர்கள், துணை ஆணையர் என ஒரு போலீஸ் பட்டாளமே குவிந்திருந்தது. காரணம், பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் செய்வதற்காகத்தான்.
மேலும், பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, போலீசார் பந்த பஸ்துடன் விக்னேஷின் உடல் எரிக்கப்பட்டது. விக்னேஷின் உடலை அவரது சகோதரர் வினோத் என்பவர் மட்டுமே பார்த்தார். வேறு யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. மேலும், போலீசாரும் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை.
உடல் தகனம் செய்யும் வரை, விக்னேஷின் சகோதரர் மற்றும் சகோதரி, செய்தியாளர்களை சந்திக்காமல் இருக்க, தலா இரு போலீஸார் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், மிகவும் ஏழ்மை குடும்பமான விக்னேஷ் குடும்பத்திற்கு 10 ஆயிரம் கொடுக்கப்பட்டு, இந்த விவகாரத்தை முடித்து விட்டனர்.
பென்னிக்ஸ், ஜெயராஜ் உயிரிழந்த விவகாரத்தில் கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின், இப்போது எங்கே போய் விட்டார்..? பென்னிக்ஸின் வீட்டிற்கே சென்று ஆறுதல் சொன்ன திமுக எம்பி கனிமொழி, திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இப்ப என்ன ஆனார்கள்..?. காவல்நிலையத்தில் சாமானிய மக்களின் உயிர் போயுள்ளது, ஆளுநருக்கு எடப்பாடி பழனிசாமி சாமரம் வீசி வருகிறார்.
காவல்நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷின் மரணத்திற்கு உள்துறை அமைச்சகத்தை கையில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின்தான் முழுக்க முழுக்க பொறுப்பு. இந்த விவகாரத்தை திசை திருப்பவே, கோடநாடு வழக்கில் சசிகலாவிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர், எனக் கூறினார்.