சென்னையின் 2 வது விமான நிலையம்; பரந்தூர் விமான நிலையம்; அனுமதி அளித்த மத்திய அரசு,..
Author: Sudha23 July 2024, 10:03 am
தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதி இல்லாத காரணத்தினால் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இதற்கான நிலமெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.
சென்னையின் 2 வது விமான நிலையமான பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (டிட்கோ)மேற்கொண்டு வருகிறது.இந்த விமான நிலையம் அமைக்க அனுமதி கேட்டு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு டிட்கோ கடிதம் அனுப்பி இருந்தது.
மாநில அரசின் இந்த பரிந்துரையை ஏற்று பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது இந்த தகவலை மாநிலங்களவையில் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு தெரிவித்தார். அவர் தன்னுடைய பதிலில் இந்த பரிந்துரை தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது இந்த ஆலோசனைக்கு பின் பசுமை வழி விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு முன்பு இந்த பரிந்துரை முன் வைக்கப்பட்டது.
இந்த பரிந்துரையை ஆய்வு செய்த குழு சில வழிகாட்டுதல்களோடு பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி அளித்துள்ளது. ஆயினும் பசுமை வழி விமான நிலைய கொள்கைகளின் படி நிதி அளித்தல் மற்றும் நிலம் கொள்முதல் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு டிட்கோவைச் சார்ந்தது என மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு தனது பதில் தெரிவித்துள்ளார்