பிரதமர் மோடியின் படம் இருந்தால் என்ன தப்பு..? செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!!
Author: Babu Lakshmanan28 July 2022, 12:50 pm
சென்னை : செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை சேர்க்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். தற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் புறக்கணிக்கப்படுவதாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனிடையே, நேற்று காலை செஸ் ஒலிம்பிக் போட்டியை விளம்பரப்படுத்திடும் வகையில் தமிழக அரசு செய்த விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் தலைமையில் பாஜகவினர் ஒட்டினர். மேலும் செஸ் விளம்பரத்தில் மோடி படத்தை ஒட்ட வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் பாஜகவினர் ஒட்டிய பிரதமர் மோடியின் புகைப்படங்களை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மை பூசி அழித்தனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் பிரதமர் பெயர் இடம்பெறாத விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராஜேஷ் கண்ணா என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் சார்பில் அவரது வழக்கறிஞர் சண்முகநாதன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் பெயர், படத்தை சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீது இன்று மதியம் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.