செஸ் ஒலிம்பியாட் திருவிழா… 4 மாவட்டங்களுக்கு விடுமுறை ; தொடக்க விழாவில் 800 கலைஞர்களின் கச்சேரி..!!

Author: Babu Lakshmanan
23 July 2022, 5:12 pm

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா சென்னையில் நடப்பதால், வரும் 28ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 28ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வி.மெய்ய நாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எ.வவேலு கூறியதாவது :- முதல்வர் உத்தரவின்படி நேரு உள்விளையாட்டு அரங்கை இன்று பார்வையிட்டோம். 28ம் தேதி இங்கு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நடைபெறுகிறது. தொடக்க விழா நிகழ்வில் பிரதமர், முதலமைச்சர் கலந்து கொள்வர்.

தொடக்க விழா மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். தொடக்க விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரங்களை பறைசாற்றும் கலை விழாக்கள் நடைபெறும். தொடக்க விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 800 கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். நேரு உள்விளையாட்டு அரங்கம் 6 ஆயிரம் பேர் அமரும் உள் அரங்கம். 187 நாட்டின் 1500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்வர். பல மாநில முதல்வர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மின்சார வசதி, தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகளை இன்று ஆய்வு செய்தோம். நேரு அரங்கில் 24ம் தேதிக்கு முன்பாக முன் ஏற்பாட்டு பணிகள் அனைத்தும் நிறைவடையும். தொடக்க விழா சென்னையில் நடப்பதால் 28ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. ( 4 மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுகிறது).

மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறோம். வெளிநாட்டு வீரர்களுக்கு விமான நிலையத்திலேயே வரவேற்பு வழங்கப்படும். தமிழர்கள் உபசரிப்பில் எப்போதும் குறைந்தவர்கள் அல்ல. உணவு அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப வீரர்களுக்கு வழங்கப்படும். முதல்வர் அன்றாடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் விசாரித்து வருகின்றார்.

கள்ளக்குறிச்சியில் நடந்தது விரும்பத்தாகத சம்பவம் , அரசு நடுவுநிலையாக செயல்பட்டு தவறிழைத்தோருக்கு தண்டனை பெற்றுத் தரும். இறுதி சடங்கில் மாவட்ட அமைச்சர் சிவி கணேசன் , சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கலந்து கொண்டனர், எனக் கூறினார்.

  • Vetrimaaran Viduthalai controversy A சான்றிதழ் கொடுத்தும் வசனங்கள் MUTE ஏன்? சரமாரியாக கேள்வி கேட்ட பிரபலம்…!
  • Views: - 650

    0

    0