சபாஷ் சரியான போட்டி… பட்டு வேட்டி, சட்டையுடன் CM ஸ்டாலின்… செஸ் கரைவேட்டியுடன் வந்திறங்கிய பிரதமர் மோடி…!!

Author: Babu Lakshmanan
28 July 2022, 6:22 pm

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடியும், முதலமைச்சர் ஸ்டாலின் வேட்டி, சட்டையுடன் தோன்றியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில், 186 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவரையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையை கொண்டதாகும்.

6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இந்த போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அணியை இந்தியா களமிறக்குகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் 186 நாடுகளைச் சேர்ந்த அணிகளின் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்தப் போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்து விட்டது. இதைத் தொடர்ந்து, பார்வையாளர்களை கவரும் விதமாக, தமிழகம், கேரளா உள்பட இந்தியாவின் 8 மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து, லிடியனின் இசை நிகழ்ச்சியுடன், முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியின் மணல் ஓவியம் உருவாக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டையை அணிந்திருந்தார். அதேபோல, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியும், செஸ் கட்டம் போல கரையுடன் கூடிய வேட்டியும், துண்டை அணிந்திருந்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் திமுக – பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றுவதிலும் இருகட்சியின் தலைவர்கள் மாறி மாறி செயல்பட்டு வருவது தமிழக அரசியலுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!