இந்தியாவின் செஸ் தலைநகரம் தமிழகம்… CM ஸ்டாலின் ; செஸ்-க்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு ; பிரதமர் மோடி

Author: Babu Lakshmanan
28 July 2022, 8:54 pm

சென்னை : 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில், 187 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவரையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையை கொண்டதாகும். 6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இந்த போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அணியை இந்தியா களமிறக்குகிறது.

இதைத் தொடர்ந்து, நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைத்தார். முன்னதாக, பார்வையாளர்களின் கண்களை கவரும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்கிறேன். நேரு விளையாட்டு அரங்கிற்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் விழா அமைந்துள்ளது. குஜராத் முதல்வராக இருந்த போது 20 ஆயிரம் வீரர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர் பிரதமர் மோடி. வெறும் நான்கே மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்தது. தமிழ்நாடுதான் இந்தியாவின் செஸ் தலைநகரமாக உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை. இதன் தொடக்க விழா மிக எழுச்சியோடு தொடங்கப்பட்டு உள்ளது. நேரு விளையாட்டு அரங்கத்திற்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் விழா அமைந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து முதல் அறிவிப்பை கடந்த மார்ச் 16 ஆம் நாள் நான் அறிவித்தேன். இதுபோன்ற பன்னாட்டு போட்டி தொடரை சிறப்பான முறையில் செய்படுத்துவதற்கு 18 மாதங்கள் ஆகும். ஆனால் தமிழக அரசு நான்கே மாதங்களில் இதன் தொடக்க பணிகளை சிறப்பாக செய்துமுடித்துள்ளது. குறுகிய காலத்தில் சிறப்பாக செய்துமுடித்துள்ள விளையாட்டு துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் நான் மனதார பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து இந்த விழாவில் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் ‘இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி உரையாற்றினார். பின்னர் அவர் கூறியதாவது:- சிறப்பான ஒரு தருணத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது. தமிழகத்திற்கும் சதுரங்க விளையாட்டிற்கும் நீண்ட வரலாற்று தொடர்பு உள்ளது. தமிழகத்தில் இருந்து பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆசியாவில் நடக்கும் இந்த செஸ் ஒலிம்பியாட்டில், இதுவரை இல்லாத அளவில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர், எனத் தெரிவித்தார்.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?