அரங்கத்தில் ஒலித்த குரல்… உடனே அப்பா பக்கம் ஓடிய உதயநிதி ; செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் நெகிழ்ந்த திமுக..!!
Author: Babu Lakshmanan10 August 2022, 9:04 am
44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 186 நாடுகளில் இருந்து வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 30 வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், கட்டபொம்மன், பெரியார், காயிதே மில்லத், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், காமராஜர் உள்ளிட்டோரின் புகைப்படங்களும், முன்னாள் முதலமைச்சர்களான ராஜாஜி முதல் முதல் ஜெயலலிதா வரை அனைவரின் படமும் விழா மேடையில் டிஜிட்டல் திரையில் காண்பிக்கப்பட்டது.
பின்னர், சிறுவர் – சிறுமியர்களின் ரூபிஸ் கியூப் சால்வ் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது.இதைத் தொடர்ந்து, டிரம்ஸ் சிவ மணியின் டிரம்ஸ், ராஜேஷ் வைத்தியாவின் வீணை, புல்லாங்குழல் கலைஞர் நவீன், ஸ்ட்பென் தேவசியின் கீ போர்ட் ஆகியோர் சேர்ந்து ‘ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. டிரம்ஸ் சிவமணி இசைக்கருவிகளை வாசித்தவாறு முதலமைச்சரிடம் சென்றார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினும் இசைக்கருவிகளை வாசித்து மகிழ்ச்சியடைந்தார்.
சிறந்த ஸ்டைலிஸ் அணியாக டென்மார்க் மகளிர் அணிக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறந்த சீருடை அணிந்த மகளிர் அணியாக உகாண்டா அணிக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறந்த சீருடை அணிந்த ஆண்கள் அணிகளாக மங்கோலியா, உஸ்பெகிஸ்தான் அணிக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறந்த ஆடை அணிந்த அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, அங்கோலா, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஓபன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற உஸ்பேகிஸ்தான், வெள்ளிப்பதக்கம் வென்ற அர்மேனியா மற்றும் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியா ஆகிய நாடுகளின் அணி வீரர்களுக்கு பதக்கங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள் குகேஷ் மற்றும் நிஹல் சரின் தங்கம் வென்றனர். ஓப்பன் மற்றும் பெண்கள் பிரிவில் சிறப்பாக விளையாடிய இந்திய ஏ அணிக்கு “நானோ கப்ரிந்தஷ்விலி” கோப்பை வழங்கப்பட்டது. அனைத்து பிரிவிலும் சிறப்பாக விளையாடிய ஒருங்கிணைந்த கோப்பையை முதலமைச்சர் ஸ்டாலின் இந்திய அணிக்கு வழங்கினார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் மேடையில் இருக்க, பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஓடோடி வந்த உதயநிதி ஸ்டாலின், தந்தையும், முதலமைச்சருமான ஸ்டாலின் கைகளில் இருந்து நினைவு பரிசை பெற்றுக் கொண்டார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த திமுகவினரை நெகிழ்ச்சியடைய வைத்தது.
0
0