திரைப்பட விழாவால் உதயநிதி ‘அப்செட்’… திரளாத ரசிகர்கள் கூட்டம்; திகைப்பில் திமுக… ‘கருணாநிதி 100’ தந்த ஷாக்!

Author: Babu Lakshmanan
8 January 2024, 9:07 pm

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் முன்பாக 5 ஆண்டுகள் வரையிலும்
அதன் பின்பு கடந்த இரண்டரை ஆண்டுகளிலும் சரி, தமிழ்த் திரையுலகம் முழுமையாக யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது சினிமா ரசிகர்களையும் தாண்டி அனைத்து தரப்பினருக்கும் நன்றாக தெரிந்த விஷயம்.

அப்படி இருந்தும் கூட கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்த, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு திரைப்பட விழா எதிர்பார்த்த அளவிற்கு முதலமைச்சர் ஸ்டாலினை திருப்திபடுத்தவில்லை என்ற செய்திகள் அத்தனை ஊடகங்களிலும் பரவலாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு முதல் காரணம், விழா நடந்த கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் திரைப்பட ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுவார்கள் என்ற நம்பிக்கையில் 25 ஆயிரம் இருக்கைகள் வரை போடப்பட்டுள்ளன. ஆனால் விழாவிற்கு 2 ஆயிரத்திற்கும் குறைவான ரசிகர்களே வந்துள்ளதாக தெரிகிறது.

இத்தனைக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குனர்கள் சங்கம், திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் என 25 சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தன.

தவிர திரைப்படத்துறைக்கும் கருணாநிதிக்கும் இடையே 60 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய பிணைப்பு உண்டு என்பதும் ஊரறிந்த ரகசியம். அதைவிட மிக முக்கியமானது, இது ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்த அவருடைய நூற்றாண்டு பிறந்தநாள் விழா என்பதாகும்.

மேலும் இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே தமிழ் திரையுலகம் சார்பில் நடத்தப்படும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடர்பாக நாளிதழ்கள், டிவி சேனல்கள், திமுக ஆதரவு சமூக ஊடகங்களில் பெருமளவில் விளம்பரம் செய்யட்டும் இருந்தது.

அதனால் மைதானத்தில் போட்ட அத்தனை இருக்கைகளும் நிரம்பி விடும் என்றே விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் விழா மேடையின் முன்பகுதியில் இருந்த பத்து, பதினைந்து வரிசைகள் தவிர மற்ற எல்லா இருக்கைகளும் காலியாகவே கிடந்துள்ளன. அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினி பேசும்போது 90 சதவீத இருக்கைகளில் ஆளே இல்லை. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலும் ஆகி பெரும் பேசு பொருளாகவும் மாறியுள்ளது.

வழக்கமாக இதுபோன்ற செய்திகளுக்கு திமுகவின் ஐடி விங் பாய்ந்துகொண்டு பதிலடி கொடுப்பது வழக்கம். ஆனால் அவர்கள் இதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா ஆகியோர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி பேசியதையே பகிர்ந்து கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான இருக்கைகள் காலியாக கிடந்ததை அவர்களால் மறுக்க முடியாத இக்கட்டான நிலைதான் அதற்கு காரணம்.

அதேநேரம் டிசம்பர் மாத வெள்ளத்தில் சென்னை நகரவாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் இந்த நிகழ்ச்சியில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்ற இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.

“திரைப்படத்துறையினர் சரியான திட்டமிடல் எதுவும் இன்றி கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம் என்று அறிவித்து கடைசியில் அதை சொதப்பி விட்டனர் என்பதுதான் உண்மை” என்று கோலிவுட் திரையுலக பிரமுகர்கள் சிலர் கூறுகின்றனர்

“அவர்கள் பேராசைப் பட்டது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மட்டுமின்றி, அவருடைய மகனும் அமைச்சருமான உதயநிதிக்கும் நிச்சயம் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கும். ஏனென்றால் இந்த விழாவை நகருக்குள் ஏதாவது ஒரு பெரிய திருமண மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தால் இந்த நிலையே ஏற்பட்டிருக்காது.

நிகழ்ச்சி நகருக்குள் நடந்து எதிர்பார்த்த ரசிகர்கள் கூட்டம் வரவில்லை என்றால் அடுத்த 15 நிமிடத்தில் பொதுமக்களை திரட்டி மண்டபங்களை நிரப்பி விட முடியும். ஆனால் இவர்களோ ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால்தான் ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் வர முடியாத நிலையில் உடனடியாக திமுக தொண்டர்களையோ, பொதுமக்களையோ திரட்ட முடியவில்லை என்பதுதான் எதார்த்தம்.

இப்படியொரு சோதனை ஏற்படும் என்று முன்பே தெரிந்திருந்தால் அமைச்சர் உதயநிதி, தனது நண்பரான அமைச்சர் அன்பில் மகேஷ் மூலம் திமுக இளைஞர் அணியினரை விழா அரங்கிற்குள் எப்படியாவது கொண்டு வந்திருப்பார். ஆனால் அதற்கும் வழியில்லாமல் போனது. திரைத்துறை சார்ந்த 25 சங்கத்தினர் ஒன்று சேர்ந்து நடத்துவதாலும் தென்னிந்திய நட்சத்திர பட்டாளமே திரள்வதால் அவர்களது ரசிகர்கள்
கூட்டம் அலைமோதும் என்று கருதியதாலும் விழாவிற்கு குறைந்த பட்சம் எப்படியும் 25 ஆயிரம் பேர் திரண்டு விடுவார்கள் என்று போட்ட கணக்கு பொய்த்துப் போய்விட்டது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் தவிர மற்ற பெரிய நடிகர்கள் யாரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பதுதான்.

மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகிலும் முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், கன்னட நடிகர் சிவராஜ் குமார் தவிர யாருமே வரவில்லை. அவரும் கூட ரஜினி தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதற்காகவே இந்த நிகழ்வில் கலந்துகொண்டார் என்கிறார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், விஷால், சிம்பு, பிரபு, விக்ரம் பிரபு, ஆர்யா, விஜய் சேதுபதி போன்றோரும் நடிகைகள் குஷ்பு, ராதிகா, சுஹாசினி, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் பங்கேற்காததால் அவர்களது ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இவர்கள் தங்களது சூழ்நிலை காரணமாக இவ்விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

நடிகர் விஜய் எதற்காக இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்பதற்கான காரணம் வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான். 2026 தமிழக தேர்தலுக்கு முன்பாக அவர் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டால் அது திமுகவுக்கு பாதகமாக அமையும் என்பதால் நடிகர் விஜய் இந்த விழாவை தவிர்த்திருக்கும் வாய்ப்புகளே அதிகம்.

எப்படிப் பார்த்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின், விரைவில் துணை முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படும் உதயநிதி ஆகியோர் தலைமையில் திரைப்படத்துறையினர் நடத்திய கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி மேடையில் நன்றாக அமைந்து இருந்தாலும் கூட மேடைக்கு எதிரே காலியாக கிடந்த ஆயிரக்கணக்கான இருக்கைகளால் திமுக அரசுக்கும், திமுகவினருக்கும் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று அந்த கோலிவுட் திரையுலக பிரமுகர்கள் கூறுகின்றனர்.

திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே இப்படியொரு சொதப்பல் என்றால்…அதை என்னவென்று சொல்வது?..

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 467

    0

    0