அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் காய்ச்சல்…மருத்துவமனையில் அனுமதி: நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!
Author: Rajesh12 April 2022, 11:28 am
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கி 24ம் தேதி முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்நாளிலேயே நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், தமிழக நீர்வளத் துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது . இதன் காரணமாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இன்றைய அவை நடவடிக்கைகளில் துரைமுருகன் பங்கேற்கவில்லை. இந்நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
துரைமுருகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விவரங்களை கேட்டறிந்த அவர், நேரில் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது. காய்ச்சல் குறைந்து உடல்நிலை சீரான பிறகு துரைமுருகன் வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.