தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் : மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Author: Babu Lakshmanan
25 January 2022, 2:14 pm

சென்னை : தமிழக மீனவர்கள்‌ மீது நடத்தப்படும்‌ தாக்குதல்‌ சம்பவங்களைத்‌ தடுக்கக்‌ கோரி முதலமைச்சர்‌ ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நாகப்பட்டினம்‌ மாவட்டம்‌, வேதாரண்யம்‌ தாலுகா, புஷ்பவனம்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த 3 தமிழக மீனவர்கள்‌, 23-1-2022 அன்று வேதாரண்யம்‌ கடற்கரையிலிருந்து 16 கடல்‌ மைல்‌ தொலைவில்‌ மீன்பிடித்துக்‌ கொண்டிருந்தபோது இலங்கையைச்‌ சேர்ந்த அடையாளம்‌ தெரியாத நபர்களால்‌ தாக்கப்பட்டதுடன்‌, அவர்களிடமிருந்து 300 கிலோ எடைகொண்ட மீன்பிடி வலை, தொலைத்தொடர்பு சாதனங்கள்‌ மற்றும்‌ 30 லிட்டர்‌ டீசல்‌ ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்து தான்‌ மிகுந்த வேதனையடைந்ததாகவும்‌, தாக்குதலுக்குள்ளான மீனவர்கள்‌ வேதாரண்யம்‌ அரசு மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வருவதாகவும்‌ தெரிவித்துள்ளார்‌.

இவ்வாறு அப்பாவி மீனவர்கள்‌ மீது தொடர்ச்சியான தாக்குதல்கள்‌ நடத்துவதன் மூலம்‌, தமிழக மீனவர்களை, அவர்களது பாரம்பரிய பாக்‌வளைகுடா மீன்பிடி கடல்‌ பகுதிகளுக்கு வரவிடாமல்‌ தடுப்பதை இலக்காகக்‌ கொண்டு செயல்படுவதையே காண முடிகிறது என்றும்‌, இலங்கையைச்‌ சார்ந்தவர்களால்‌ நடத்தப்படும்‌ இதுபோன்ற தாக்குதல்‌ சம்பவங்கள்‌, நமது மீனவ மக்களின்‌ வாழ்வாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன என்றும்‌, இந்த விவகாரத்தில்‌ இந்திய அரசு வாய்மூடி மெளனமாக இருத்தல்‌ கூடாது என்றும்‌ தனது கடிதத்தில்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

தமிழக மீனவர்கள்‌ மீது இதுபோன்று தாக்குதல்‌ நடத்தப்படுவதும்‌, அவர்களது உடைமைகளை கொள்ளையடிக்கும்‌ அல்லது சேதப்படுத்தும்‌ இதுபோன்ற செயல்கள்‌ எதிர்காலத்தில்‌ நடைபெறாத வகையில்‌ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம்‌ கொடுக்க வேண்டுமென்றும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தனது கடிதத்தில்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?