ஆளுநர் ரவியை திடீரென சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்… மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு கோரிக்கை..!!
Author: Babu Lakshmanan2 June 2022, 6:34 pm
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என் ரவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு, 2022-க்கு ஒப்புதல் வழங்கிட ஆளுநரை வலியுறுத்தினார்.இந்தச் சந்திப்பின் தொடக்கத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தமைக்கு ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அதோடு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்த) சட்டமுன்வடிவு, 1983, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்டமுன்வடிவு, 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022 உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும் தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு ஆளுநரரை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆளுநருடனான ‘இந்தச் சந்திப்பின் போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் பொன்முடி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னாசு ஆகியோர் உடனிருந்தனர்.
0
0