பாஜகவை ஒட்டுமொத்தமாக வீழ்த்த வேண்டும்… இந்தமுறை மக்கள் ஏமாந்து விடக் கூடாது : வெளியானது முதலமைச்சர் ஸ்டாலின் உரை!!
Author: Babu Lakshmanan23 September 2023, 9:00 am
2024 தேர்தலில் பாஜகவை ஒட்டுமொத்தமாக வீழ்த்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைமைப்பில் ஆடியோ பதிவு மூலம் தமிழக மக்களிடம் முதுலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். ஏற்கனவே முதலாவது ஆடியோ வெளியான நிலையில், 2வது உரை வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில் அவர் பேசியிருப்பதாவது :- 2014 மற்றும் 2019ல் ஏமாந்ததைப் போல, 2024ல் மக்கள் ஏமாந்து விடக் கூடாது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை ஒட்டு மொத்தமாக வீழ்த்த வேண்டும். 60 மாதங்கள் கொடுங்கள், இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன் என்று மோடி கூறினார். அவருக்கு 60 மாதங்கள் மட்டுமில்லை. கூடுதலாக இன்னொரு 60 மாதங்களையும் இந்திய மக்கள் வழங்கினார்கள். வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றி விட்டாரா என்ற கேள்விக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும்.
வகுப்புவாதம், ஊழல், மோசடி, அவதூறுகள் கொண்டதாக பாஜக அரசு உள்ளது. பாஜகவின் வகுப்புவாத, கார்ப்பரேட் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே குரலாக முழங்க வேண்டும். இண்டியா கூட்டணியின் பரப்புரை பாஜக கட்சி, பிரதமர் மோடியின் பிம்பத்தை கிழித்துவிட்டது.
பல மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட்டுள்ளது. சிஏஜி அறிக்கை குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் ஏன் விவாதிக்கவில்லை? அயோத்தியா திட்டத்தில் கூட ஊழல் செய்த கட்சிதான் பாஜக என்று சிஏஜி அறிக்கை கூறியுள்ளது. அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளது, எனப் பேசினார்.