வீடுகளை பழுது பார்க்க ரூ.385 கோடி… பயிர்சேத நிவாரணம் ரூ.250 கோடி… முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களுக்கு ரூ.1000 கோடி நிவாரணத் தொகுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் கடந்த 21.12.2023 அன்று ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அமைச்சர் பெருமக்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, மனோ தங்கராஜ் ஆகியோர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்கள்.

அதேபோல் 10-க்கும் மேற்பட்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்திட அனுப்பிவைக்கப்பட்டனர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள், குறிப்பாக குடிநீர் மற்றும் மின்சார வசதி வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் தற்காலிக அடிப்படையில் சரிசெய்யப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மின் துறை, நகராட்சித் துறைப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர தீவிரமாகக் களப் பணியாற்றினார்கள். இந்தச் சூழ்நிலையில், கடந்த 21.12.2023-ஆம் தேதி அன்று தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழகுவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்கள். அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளுக்குக் கூடுதலாக, அவர்களுடைய பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் இன்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்பட்டன.

அதன் விவரம் பின்வருமாறு;

  1. சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் மற்றும் பழுதுபார்த்தல் – ரூ.385 கோடி
  • திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டித்தருவதும் அரசின் தலையாய கடமை என்பதை கருத்திற்கொண்டு வீடுகள் பழுது பார்ப்பதற்கும், முழுமையாக கட்டித்தருவதற்கும் அரசு முடிவெடுத்துள்ளது.
  • ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ.4 இலட்சம் வழங்கிடவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 2 இலட்சம் வரை வழங்குவது எனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4577 புதிய வீடுகள் கட்டப்படும் மற்றும் 9975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் முழுவதும் மாநில அரசு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். இத்திட்டத்திற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
  1. பயிர்ச்சேத நிவாரணம் – ரூ.250 கோடி

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2,64,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென இழப்பீட்டு நிவாரணம் மொத்தம் 250 கோடி ரூபாய் வழங்கப்படும். பயிர் சேதம் நேரிட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடனும் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் இம்மாவட்டங்களில் விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட மண் படிந்துள்ளது. இதனை அகற்றி மீண்டும் விவசாயத்திற்கு ஏற்றவகையில் சீர்செய்துதரும் பணி மாநில வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக கட்டணமின்றி மேற்கொள்ளப்படும், இதற்கென வெளி மாவட்டங்களிலிருந்து தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் வரவழைக்கப்படும்.

  1. சிறு வணிகர்களுக்கு ரூ.1 இலட்சம் வரை சிறப்பு கடன் திட்டம்

இந்த பெருமழையின் காரணமாக சென்னை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சிறு வணிகர்கள் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளனர். அரசு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டிய அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டும், உள்ளூர் பொருளாதாரத்தில் அவர்களது பங்களிப்பை அறிந்தும் அதன் அடிப்படையில் சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் கடன் தேவைகளை நிவர்த்திச் செய்ய இந்த கடன் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வரை 4 சதவீத வட்டி, ரூ.1 இலட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரையில் வெளியிடப்படும்.

  1. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ரூ.3 இலட்சம் வரை வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள், தங்கள் வணிகத்தை மீண்டும் புதுப்பிக்கத் தேவையான மூலதனச் செலவு மற்றும் நடைமுறை மூலதனம் போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு நிதியுதவி அளித்திட, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் (TIIC) மூலம் “குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம்” என்ற சிறப்புத் திட்டம் தொடங்கப்படும்.

இந்தத் திட்டத்தின்கீழ், மேற்கூறிய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.100 கோடி கடனாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3 இலட்சம் வரை, ஆண்டுக்கு 6% சிறப்பு சலுகை வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். இக்கடனை தொழில் நிறுவனங்கள் 3 மாத கால அவகாசத்துடன் 18 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3300 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  1. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.350 கோடி கடன்

இந்த இயற்கைப் பேரிடரினால் பொருளாதார நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளதால், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கடன் திருப்பம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய நிலையைக் கருத்திற்கொண்டு புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் கடன் பெற்றுள்ள சுய உதவிக் குழுக்கள் நிவாரணக் கடன் தவணை மற்றும் வட்டியைத் திருப்பி செலுத்தவதற்கும் அவர்கள் பெற்றுள்ள கடனை மறுசீரமைப்பும் செய்துத்தரப்படும். மாநில மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர் குழுக் கூட்டத்தில் இதனை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வியாபாரம் / குறு சிறு தொழில் புரியவும், ஏற்கெனவே உள்ள பொருளாதாரச் சொத்தை சரி செய்யவும் / அல்லது புதிய சொத்தை உருவாக்கவும், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு இந்தத் தருணத்தில் கடன் உதவி மிகவும் அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், நடப்பு ஆண்டில், கடன் பெறத் தகுதி வாய்ந்த மகளிர் 4,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.350 கோடி அளவில் அவர்களுக்கு புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  1. நிலுவையில் உள்ள கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு

பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலுவையிலுள்ள கடன் தவணைகளை செலுத்திவதில் கால நீட்டிப்பு குறித்து மாநில அளவிலான வங்கியாளர் குழுவில் விரைவில் உரிய முடிவெடுக்கப்படும்.

  1. சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் – ரூ.15 கோடி

பெருமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாட்டங்களில் 4928 மீன்பிடி படகுகளும், இயந்திரங்களும் சேதமடைந்துள்ளன. இதற்கென நிவாரணத் தொகையாக 15 கோடி ரூபாய் வழங்கப்படும்.

  1. கால்நடைகள் வாங்குவதற்கு கடன்

பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 17,000 கால்நடைகளும் 1 இலட்சத்திற்கும் மேல் கோழிகளும் உயிரிழந்தன. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக பசு, எருமைக்கு 37,500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடு ஒன்றிற்கு 4,000 ரூபாய் வரையிலும், கோழி ஒன்றிற்கு 100 ரூபாய் வரையிலும் வழங்கப்படும். கால்நடை இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கால்நடைகளை வாங்கிட வசிதியாக ரூ.1.50 இலட்சம் வரை புதிய கடன் வழங்கப்படும்.

  1. உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை – ரூ.3000

பெருமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட உப்பளத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பளத் தொழிலாளர்களுக்கு கூடுதல் வாழ்வாதார நிவாரணத் தொகை தலா
ரூ.3000 வழங்கப்படும்.

  1. பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்குதல்

(அ) வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவியர்களின் பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் அல்லது சேதமடைந்து இருக்கலாம். அவர்களுக்குப் புதிய சான்றிதழ்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ்களை இழந்த மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளியில் விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் அவர்களுக்கு அந்த பள்ளித் தலைமை ஆசிரியர் / கல்லூரி
முதல்வர் மூலமாக புதிய மாற்றுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(ஆ) அதேபோல், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பாடப் புத்தகங்களை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள் அவர்கள் படிக்கும் பள்ளியின் மூலமாக வழங்கப்படும். இது பாதிப்புக்குள்ளான அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேவைக்கேற்ப அவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும்.

  1. வருவாய்த் துறை மற்றும் இதர அரசுத் துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் வழங்குதல்

வருவாய்த் துறை மற்றும் இதர அரசுத் துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் / ஆவணங்கள், குடும்ப அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற அரசு ஆவணங்களை இந்த மழை வெள்ளத்தால் இழந்தவர்கள் புதிய ஆவணத்தை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் அந்தந்த மாவட்ட
ஆட்சியர்களால் வரும் திங்கள் கிழமை தோறும் துவங்கப்படும்.

  1. வெள்ளத்தால் பழுதடைந்த வாகனங்களுக்கான காப்பீடு:

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகய மாவட்டங்களில் காப்பீட்டு நிறுவனங்களும், வாகன தயாரிப்பு நிறுவனங்களும், முகவர்களும் சிறப்பு முகாம்கள் நடத்தி தங்களது சேவைகளை துரிதப்படுத்திட தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வாகன பழுது பார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 3,046 மோட்டார் வாகனங்கள் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டு அவற்றில் 917 வாகனங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,129 வாகனங்களுக்கான பழுதுபார்ப்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Share
Published by
Babu Lakshmanan

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

8 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

9 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

9 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

10 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

10 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

11 hours ago

This website uses cookies.