இந்த முறை அந்த தப்பு நடக்காது… பொங்கல் பரிசுத் தொகுப்பில் முக்கிய மாற்றம் : ரூ.1,000த்தோடு அறிவிப்பை வெளியிட்ட CM ஸ்டாலின்!!
Author: Babu Lakshmanan22 December 2022, 6:08 pm
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்படுவது வழக்கம். கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டதால், 2021ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகையை ரூ.1,000த்தில் இருந்து ரூ.2,500ஆக அப்போதைய அதிமுக அரசு உயர்த்தி வழங்கியது.
இதைத் தொடர்ந்து, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2022ம் ஆண்டு வெல்லம், முந்திரி, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதிலும், வெல்லம் உருகிய நிலையிலும், பருப்பு, கரும்பு, அரிசி என பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த பொருட்கள் தரமற்ற நிலையிலும் இருந்தது. இதனால், திமுக அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
எனவே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அண்மையில் ஆலோசனை நடத்தினர். அப்போது, விமர்சனங்களை தவிர்க்கும் விதமாக, நியாயவிலைக் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன், பச்சரிசியும், வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரை மட்டும் வழங்கலாமா என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதனால், 2023ம் ஆண்டு பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு வழங்கவுள்ள பரிசு தொகுப்பு குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதோடு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் ஜனவரி 2ம் தேதி தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.