ரூ.31,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி… சூட்டோடு சூடாக கோரிக்கைகளை தட்டிவிட்ட CM ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
26 May 2022, 7:47 pm

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 31 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், நாட்டுக்கு அர்ப்பணித்தும் பிரதமர் மோடி வைத்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக, அடையாறில் உள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் சென்றார். அங்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டரங்கிற்கு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது, சாலையின் இருபுறங்களிலும் திரண்ட தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

பின்னர், மேளதாளம் முழங்க நேரு விளையாட்டரங்கிற்கு பிரதமர் மோடி சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தொடக்க உரை ஆற்றினார்.

இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது :- திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்றுள்ள அரசு நிகழ்ச்சி இது. தமிழகத்தில் திட்டங்கள் துவங்க வருகை தந்த பிரதமர் மோடிக்கு மக்கள் சார்பில் நன்றி. தமிழகத்தின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல. பிற மாநிலங்களின் வளர்ச்சியை விட தமிழகத்தின் வளர்ச்சி தனித்துவம் மிக்கது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 8.4 சதவீதமாகும். மத்திய, மாநில அரசுகளோடு பயனாளிகளின் பங்களிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது, எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு முக்கிய 5 கோரிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் முன் வைத்தார். அதாவது, கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் இன்னலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி தொகை நிலுவை ரூ.14,000 கோடி வழங்க வேண்டும்.

சாலை கட்டமைப்பை மேம்படுத்தவதில் மத்திய அரசோடு இணைந்து பணியாற்ற தமிழக அரசு தயாராக உள்ளது. இந்திக்கு இணையான அலுவல் மொழியாக செம்மொழி தமிழை அறிவிக்க வேண்டும். உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும், எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, ரூ. 31 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், நாட்டுக்கு அர்ப்பணித்தும் பிரதமர் மோடி வைத்தார்.

பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த திட்டங்கள்

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு ரூ.598 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 3-வது ரயில் பாதை அர்ப்பணிப்பு

மதுரை – தேனி இடையே ரூ.506 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதை அர்ப்பணிப்பு

ரூ.849 கோடி செலவில் எண்ணூர் – செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் அர்ப்பணிப்பு

பெங்களூரு – திருவள்ளூர் பிரிவிலும் 271 கிலோ மீட்டர் தூரத்துக்கு எரிவாயு குழாய்கள் ரூ.911 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள செயல் திட்டம் அர்ப்பணிப்பு

சென்னை – கலங்கரை விளக்கம் செயல் திட்டத்தின் கீழ் அந்த சுற்று வட்டாரத்தில் குடியிருப்போருக்காக ரூ.116 கோடி செலவில் கட்டப்பட்ட 1,152 வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார்

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய திட்டங்கள்

ரூ.14.872 கோடி செலவில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைவு வழி சாலை

ரூ. 5,852 கோடி செலவில் துறைமுகம் – மதுரவாயல் இடையே அமைக்கப்படும் இரண்டடுக்கு மேம்பாலம்.

பெங்களூருவில் இருந்து தர்மபுரி இடையே ரூ.3,471 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைத்தல்

சென்னையில் ரூ.1,428 கோடியில் பல வகை வழிமுறைகளுடன் கூடிய சரக்கு பூங்கா அமைத்தல் ஆகிய திட்டப்பணிகள்

சென்னை எழும்பூர், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, காட்பாடி ஆகிய 5 ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டம்

மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.724 கோடி செலவில் தனி பாதைகள் அமைக்கப்படுகிறது.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 710

    0

    0