இரவோடு இரவாக முதலமைச்சர் ஸ்டாலின் ஈரோடு பயணம் : நாளை அனல் பறக்கப் போகும் இறுதிகட்ட பிரச்சாரம்..!!
Author: Babu Lakshmanan24 February 2023, 9:58 pm
கோவை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக ஈரோடு சென்று கொண்டிருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் கிழக்குத் தொகுதியில் வருகின்ற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அத்தொகுதியில் பிரச்சாரங்கள், வாக்கு சேகரிப்புகள் தீவிரமடைந்துள்ளது. நாளையுடன் பிரச்சாரங்கள் வாக்கு சேகரிப்புகள் முடிவடையும் நிலையில் அத்தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதற்காக விமானம் மூலம் தற்போது கோவை வந்தடைந்த முதலமைச்சருக்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்த்குமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், உளவுத்துறை ஐஜி டேவிட்சன், கூடுதல் டிஜிபி சங்கர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் அரசு சார்பில் வரவேற்றனர்.
மேலும் கோவை விமான நிலையத்தில் திமுக கட்சியின் சார்பில் தொண்டர்கள் மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கி தொண்டர்கள் அளித்த அன்பளிப்பை பெற்று கொண்டார்.
விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக ஈரோடு செல்கிறார். நாளை ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் முதலமைச்சர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார்.