குழந்தையை கிள்ளிவிட்டு சீண்டாதீர்கள்.. தொட்டிலை ஆட்டும் முன் தொலைந்துவிடுவீர்கள் : CM ஸ்டாலின் கண்டனம்!!
Author: Udayachandran RadhaKrishnan29 March 2023, 7:57 pm
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என்ற இந்தி வார்த்தை பெரிய அளவில் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின், எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI), தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! இந்தி திணிப்பை நிறுத்துங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சினை குறித்து ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியான செய்தியையும் முதல்வர் தன் ட்வீட்டில் இணைத்துள்ளார்.
மேலும், “குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!” எனவும் முதல்வர் தனது ட்விட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.
ஆவின் நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று இந்தியில் எழுத வேண்டும் எனவும் தஹி என்ற வார்த்தை பெரிதாகவும் அதற்குப் பக்கத்தில் தயிர் என்ற தமிழ் வார்த்தை சிறிய அளவில் இடம்பெறலாம் எனவும் மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதற்கு தமிழக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலினும் தனிப்பட்ட முறையில் தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதேபோல கர்நாடகாவிலும் அந்த மாநில அரசின் நந்தினி நிறுவனம் விநியோகிக்கும் தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையைப் போட அறிவுறுத்தப்பட்டது. இதறகு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. வேறு சில மாநிலங்களும் இதேபோன்ற அறிவுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.