50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்… பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்த விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவிப்பு..!!

Author: Babu Lakshmanan
27 July 2023, 2:31 pm

திருச்சி ; திருச்சியில் வேளாண் சங்கமம் கண்காட்சியில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் வேளாண்மை, உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற வேளாண் சங்கமம் கண்காட்சி அரங்கினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விழா மேடையில் பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி, 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

வேளாண் சங்கமம் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் 250 உள்ளரங்குகளும், 50 வெளி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் 17 மாநில அரசு துறைகளும், மத்திய அரசின் 8 ஆராய்ச்சி நிறுவனங்களும், 3 வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களும், 80க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டன.

இக்கண்காட்சியில் பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள், செயல்விளக்கத் திடல்கள், பசுமைகுடில்கள், மண்ணில்லா விவசாயம், நவீன இயந்திரங்கள், ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேளாண்மை துறை ஆணையர் சுப்பிரமணியன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில் விவசாயிகளுக்குத் தேவைப்படும் புதிய தொழில்நுட்பம் குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், விவசாயிகள் – விஞ்ஞானிகள் கலந்துரையாடல், செயல்விளக்கங்கள் மற்றும் வேளாண் துறை திட்டங்கள் சார்ந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இக்கண்காட்சிக்கு வருகை தரும் விவசாயிகளுக்குத் தேவைப்படும் அனைத்து பயிர்களின் விதைகள், தென்னங்கன்றுகள், பழமர கன்றுகள் மற்றும் காய்கறி விதைகள், நுண்ணூட்ட கலவைகள், திரவ உயிர் உரங்கள், உயிரி கட்டுப்பாட்டுக் காரணிகள், மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இக்கண்காட்சியில் உழவன் செயலி பதிவிறக்கம், திட்டப் பதிவுகள், மண்வள அட்டை வழங்குதல் (மண் மாதிரி மற்றும் பாசன நீர் மாதிரி எடுத்து வரும் விவசாயிகளுக்கு) ஆகிய சேவைகள் வழங்கப்படுகிறது. மேற்காணும் இடுபொருட்கள் மற்றும் சேவைகள் தேவைப்படும் விவசாயிகள் , தங்களது ஆதார் அட்டையின் நகலினை உடன் கொண்டு வந்து பெற்றுக்கொண்டனர். கண்காட்சியை காண அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். எனவே, அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இக்கண்காட்சி முகாமினை பார்வையிட்டு பயன்பெறலாம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 334

    0

    0