தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தி… ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்…!!

Author: Babu Lakshmanan
14 February 2024, 1:26 pm

தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்தும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்த்தும் 2 அரசினர் தனித் தீர்மானங்களை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது, அவர் பேசியதாவது :- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம். மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையை கைவிடுமாறு மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை கலைக்கும் நிலை ஏற்படும். மத்தியில் ஆட்சி கவிழ்ந்தால் அனைத்து மாநிலத்திலும் ஆட்சியை கவிழ்த்து விடுவீர்களா..?. ஒரே நாளில் நாடாளுமன்ற தேர்தலை கூட நடத்த முடியாத சூழலே உள்ளது ; பின்னர் எப்படி ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமாகும்.

தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உள்ளது தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை. மக்கள் தொகையை கட்டுப்படுத்தயதற்கு தரும் தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை அமைந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி எண்ணிக்கையை குறைத்தால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.

தற்போது உள்ள மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவையில் உறுப்பினர் எண்ணிக்கை வடமாநிலங்களை விட குறைந்துவிடும். இதுபோன்ற பாரபட்சங்கள் தான் மாநிலங்களுக்கான நிதி பகிர்விலும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை கட்டுப்படுத்துதல் நடவடிக்கைகளை தீவிரமாக்கும் வரை தொகுதிகள் எண்ணிக்கை இப்படியே தொடர வேண்டும், எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, தீர்மானங்களின் மீது உறுப்பினர்கள் உரையாற்றினர். அப்போது, தொகுதி மறுவரையறை செய்தால் தொகுதிகளை குறைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

பின்னர், ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்தும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்த்தும் முதலமைச்சரின் 2 தனித்தீர்மானங்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…