‘ஏழிசை மன்னர்’ டிஎம்எஸ் சிலை மதுரையில் திறப்பு… முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன டிஎம்எஸ் குடும்பத்தினர் …!!

Author: Babu Lakshmanan
17 August 2023, 10:15 am

பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின திறந்து வைத்தார்.

தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம்.சௌந்தரராஜன் 1923ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்று 1950ஆம் ஆண்டு முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் சிறப்புமிக்க பாடகராக மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுத் திகழ்ந்தார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தமிழ்நாட்டு மக்களால் டி.எம்.எஸ். என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, “ஏழிசை மன்னர்” என்ற பட்டத்தை டிஎம்எஸ்சுக்கு சூட்டினார். மேலும், கடந்த 1974-75ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும், 2003-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டமும் பெற்றார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, ஏராளமான பக்திப் பாடல்களையும் பாடி தன் குரல் வளத்தால் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்வோடு கலந்திருந்த டி.எம். சௌந்தரராஜன் 25.5.2013 அன்று காலமானார்.

பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம்.சௌந்தரராஜன் புகழுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு, “டி.எம்.சௌந்தரராஜன் சாலை” என்று கடந்த 24.3.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் பெயரிடப்பட்டது.

2023-24ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவினையொட்டி அவரது புகழைச் சிறப்பிக்கும் வகையில் மதுரை மாநகரில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, மதுரை, முனிச்சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன் திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். டி.எம். சௌந்தரராஜன் குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 353

    0

    0