முதலமைச்சர் ஸ்டாலின் முதல் குற்றவாளி.. 2வது உதயநிதி : ஆதாரத்துடன் அண்ணாமலை குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2023, 7:53 pm
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளது. குறிப்பாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என கூறி வருகின்றனர். இதற்கிடையே நீட் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தற்கொலை செய்தார். இதனால் மனமுடைந்த அவரது தந்தையும் உயிரை மாய்த்து கொண்டார்.
இந்நிலையில் தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறியும், நீட் குறித்த ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சை கண்டித்தும் இன்று திமுக சார்பில் மதுரையை தவிர்த்து மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது. சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நடக்கும் உண்ணாவிரதத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அதேபோல் பிற மாவட்டங்களில் நடக்கும் உண்ணாவிரதங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் தான் நீட் தேர்வு விஷயத்தில் திமுகவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதாவது இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ‛‛என் மண்; என் மக்கள்” யாத்திரை நடந்தது. இந்த வேளையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது நீட் தேர்வை எதிர்க்கும் திமுக போராட்டம் நடத்துவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர், ‛‛தமிழகத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.. இனியும் நீட் தேர்வு நடத்தப்பட்டதால் பெரிய போராட்டம் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பேசியுள்ளார்” என வினவினார்.
இந்த கேள்விக்கு அண்ணாமலை, நீட் தேர்வில் 18 தற்கொலைகள் நடந்துள்ளது என்றால் தற்கொலைக்கு தூண்டியதாக திமுகவினர் மீது தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதில் முதல் குற்றவாளியாக இதற்கு முன்பு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினும், 2வது குற்றவாளியாக உதயநிதி ஸ்டாலினும் தான் இருக்க வேண்டும்.
இதற்காகவே இந்திய தண்டனை சட்டத்தில் தற்கொலைக்கு தூண்டியவர்கள் என தனிப்பிரிவே உள்ளது. ஒன்றும் இல்லாத நீட் தேர்வை திமுகவினர் தூண்டி தூண்டி உணர்ச்சிப்பூர்வமாக மாற்றி உள்ளனர். இந்தியாவில் நீட் தற்கொலை நடக்காதபோது திமுக எதிர்க்கட்சியாக இருந்தது முதல் இப்போது வரை தமிழகத்தில் தற்கொலை நடக்கிறது என்றால் அவர்கள் மீது தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நீட் தேர்வில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் வெற்றி பெறுகின்றனர்.
ஆந்திராவில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நல்ல ரிசல்டை கொடுக்கின்றனர். இந்த முறை இந்தியாவில் டாப் முதலிடம் மட்டுமின்றி டாப் 10ல் முதல் 4 இடங்களை நாம் வாங்கி உள்ளோம். அப்படி இருக்கும்போது நீட் யாருக்கு எதிரானது?. தமிழகத்தில் 33 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன.
இதில் 22 திமுக காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 2006 முதல் 2011 வரை மாநிலத்திலும் 2013 வரை மத்தியிலும் திமுகவினர் ஆட்சியில் இருந்தனர். இந்த வேளயைில் 13 தனியார் மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளை திமுகவினர் நடத்துகின்றனர். அரசு பள்ளி மாணவ-மாணவிகள் உள்ஒதுக்கீட்டிலும், உள்ஒதுக்கீடு இன்றியும் நீட் தேர்வு மூலம் மருத்துவம் படிக்க செல்கின்றனர்.
அப்படி இருக்கும்போது நீட் தேர்வு என்பது யாருக்கு எதிரானது?. வரும் நாட்களில் இன்னொரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் அது நடக்ககூடாது என கடவுளை வேண்டிக்கொள்கிறேன். ஒருவேளை தற்கொலை நடந்தால் நீட் குறித்து விதண்டாவாதமாக பேசும் திமுக அமைச்சர்கள் மீது தான் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என சாடினார்.