இது செலவு இல்ல… என்னோட கடமை ; பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் குறித்து நெகிழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
15 September 2022, 11:59 am

மதுரை ; ‘பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’, நூறாண்டுக்கு முந்தைய நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி திமுக வரை திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்பதில் பெருமிதம் கொள்கிறேன்’ என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மதுரையில் தொடங்கி வைத்தார். மதுரை கீழ அண்ணாதோப்பு பகுதியில் அமைந்துள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரிய கருப்பன், கீதா ஜீவன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், மதுரை மேயர் இந்திராணி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ‘அண்ணாவின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெரிதும் மகிழ்ச்சியாக உள்ளது. காலை உணவு உண்ண முடியாத காரணத்தால் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் வருகைப் பதிவு மிகக் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவை உறுதி செய்யவே இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்.

நூறாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சென்னை மாகாணத்தில் ஆட்சியிலிருந்த நீதிக்கட்சியின் சர் பி.டி.தியாகராயர், சென்னையிலுள்ள பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பிறகு ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு கடந்த 1957-ஆம் ஆண்டு காமராஜரால் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. 1971-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதியால் கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிறகு ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தினார். மேலும் கூடுதல் மையங்களைத் திறக்கவும் உத்தரவிட்டார். கடந்த 1989-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பல்வேறு பொய் பரப்புரைகளை முறியடித்து, சத்துணவுத் திட்டத்தை தொடர்ந்ததுடன், கூடுதலாக முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். பிறகு ஜெயலலிதாக முதல்வராக இருந்தபோது கலவை சாதம் வழங்கினார். இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்தில் இந்தத்திட்டம் அப்போதைய ஆட்சியாளர்களால் விரிவுபடுத்தப்பட்டது.

சென்னையில் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டபோது, பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு உண்ணாமல் வருவதை அறிந்தேன். அந்த நிலையைப் போக்கவே காலை உணவு திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்தேன். இந்தத் திட்டத்தின் வாயிலாக ஆயிரத்து 545 அரசு தொடக்கப்பள்ளிகளில் உள்ள 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 குழந்தைகள் பயன்பெறுவர். இதற்காக தமிழக அரசு 33 கோடியே 56 லட்சம் ரூபாயை செலவிடுகிறது. இந்தத் திட்டத்தை சலுகை, தர்மம், இலவசம் என யாரும் எண்ணக்கூடாது. இது அரசின் தார்மீகக் கடமை. பசிப்பிணி நீங்கினால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவர். இதனால் கல்வியில் தமிழ்ச்சமூகம் மேம்படும்.

கல்வி என்பது நாம் போராடிப் பெற்ற உரிமை. இதனை யாரும் மாணவர்களிடம் இருந்து பறிக்க முடியாது. உணவு, பசி என்ற கவலையின்றி அனைத்து மாணவர்களும் நன்கு படிக்க வேண்டும். அதற்கு இந்த அரசு உதவி செய்யும். பசிப்பிணியைப் போக்குவதற்காக எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக உள்ளேன்,’ என்றார்.

இதைத்தொடர்ந்து, கோவை பகுதியில் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கிய சமூக சேவகி கமலாத்தாள் பாட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்தார். ‘நூற்றாண்டு கண்ட கல்விப் புரட்சி’ எனும் நூலை முதல்வர் வெளியிட அதன் முதல் பிரதியை கமலாத்தாள் பெற்றுக் கொண்டார். முன்னதாக, சமூக மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அனைவரையும் வரவேற்றார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

முன்னதாக, மதுரை நெல் பேட்டை உள்ள பேரறிஞர் அண்ணாவின் 114 பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு தமிழக முதல்வர் மரியாதை செலுத்தினார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…
  • Close menu