மலிவான, தரம் தாழ்ந்த அரசியலை செய்யும் ஆளுநர்கள் : திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Author: Babu Lakshmanan
18 January 2024, 4:56 pm

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள கவர்னர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகாரப் போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம்! மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு.

பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, கழகத்தையும் தமிழ்நாட்டையும் தலைமையேற்று வழிநடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1970-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கழக மாநில மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு வழங்கினார். அதில் ஐந்தாவது முழக்கம், ‘மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’ என்பதாகும். பன்முகக்தன்மை கொண்ட இந்திய ஒன்றியம் வலிமையாக இருக்க வேண்டுமென்றால், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே மாநில சுயாட்சிக் கொள்கையின் நோக்கம். அது நிறைவேற்றப்பட்டால்தான், உண்மையான கூட்டாட்சிக் கருத்தியலின்படி இந்திய ஒன்றியம் வலிமையுடன் செயல்பட முடியும்.

பத்தாண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள கவர்னர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகாரப் போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.

கவர்னர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான – தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது. ஆன்மீக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியைத் தூண்டுவது, இந்தி – சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர – அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.

சென்னையையும் பிற மாவட்டங்களையும் கடுமையாகப் பாதித்த மிக்ஜாம் புயல் – மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை – வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இளைஞரணி மாநில மாநாடு, ஜனவரி 21-இல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தம்பி உதயநிதி முன்னெடுத்து வருகிறார். இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் அவருக்குத் தோளோடு தோள் நின்று பணியாற்றுவதைக் காண்கிறேன். அதுபோலவே, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள கழக முதன்மைச் செயலாளர் – மாநாடுகளைச் சிறப்பாக நடத்திக்காட்டுவதில் வல்லவரான மாண்புமிகு கே.என்.நேரு அவர்களும், சேலம் மாவட்டக் கழக நிர்வாகிகளும் பந்தல் அமைப்பு தொடங்கி அனைத்து ஏற்பாடுகளையும் இரவு – பகலாக மேற்கொண்டு வருகிறார்கள்.

இளைஞரணி மாநில மாநாட்டின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு தழுவிய அளவில் இருசக்கர வாகனப் பேரணியை கண்கவரும் வகையில் நடத்திக் காட்டிய இளைஞரணி நிர்வாகிகள், இன்று (ஜனவரி 18) காலையில் சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து சுடரேந்தித் தொடர் ஓட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி தொடங்கி வைத்த இந்தச் சுடரோட்டம் சேலம் வரை தொடர்கிறது.

நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன். தொடர்ச்சியான பணிகள் காரணமாக, மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஒன்றிரண்டு கடிதங்களே என்னால் எழுத முடிந்தது. எனினும், இளைஞரணியின் 25-ஆம் ஆண்டினையொட்டி 2007-ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதிய 25 கடிதங்களை முரசொலியின் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு, இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது கழகம்.

தம்பி உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு – சிவப்புக் கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும், என தெரிவித்துள்ளார்.

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 408

    0

    0